மேலும்

கொழும்பில் கோத்தா பறித்த வீட்டை தமிழரிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Supreme Courtகொழும்பில் தமிழ் இணையருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டை சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்தமை  அடிப்படை உரிமை மீறல் என்று தீர்ப்பளித்துள்ள சிறிலங்காவின் உச்சநீதிமன்றம், அதன் உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தையில் உள்ள மூன்று மாடி வீட்டை, 2009 ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் நாள் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகாரம் எடுத்தது.

விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற சந்தேகத்தில், இந்த வீட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடுதல் நடத்தியிருந்தனர். இதன் பின்னரே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் இந்த வீடு சுவீகரிக்கப்பட்டது.

இதற்கு எதிராக, வீட்டின் உரிமையாளர்களான சண்முகம் சிவராஜா நாகராஜா, மற்றும் அவரது மனைவி சிவராசா சரோஜினி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்கள் புவனேக அலுவிகார, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட அமர்வு, நேற்று தீர்ப்பை அளித்தது.

இதன்படி, வெள்ளவத்தையில் உள்ள மூன்று மாடி வீட்டை சுவீகரித்த விடயத்தில் உரிமையாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும், இதற்கு இழப்பீடாக 5 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களிடம், எட்டு வாரங்களுக்குள் அதனை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச பதவி வகித்த போதே, இந்த வீடு சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *