மேலும்

டெனீஸ்வரனுக்கு பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை

vinthanவடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் அமைச்சராக நியமிக்கப்பட்ட, பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின், சார்பில் வடமாகாண அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.டெனீஸ்வரனை, தமது கட்சியின் ஒழுக்க விதிகளை மீறினார் என்பதால், கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறும், கோரி ரெலோ சார்பில் கடந்த 13ஆம் நாள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதற்கு முதலமைச்சரும் உடனடியாகவே சாதகமான பதிலை அனுப்பியிருந்தார்.

இதையடுத்து. வவுனியாவில் கூடிய ரெலோ உயர்மட்டக் குழு டெனீஸ்வரனுக்குப் பதிலாக அமைச்சர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று ஆராய்ந்தது, எனினும், அந்தக் கூட்டத்தில் முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, ரெலோ பொதுச்செயலர் சிறீகாந்தா அனுப்பியுள்ள கடிதத்தில், பா.டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக தமது கட்சியைச் சேர்ந்த விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, ரெலோ சார்பில் அமைச்சராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஏற்கனவே இழுபறிகள் காணப்பட்டன. வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை அமைச்சராக நியமிப்பதில், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், வட மாகாணசபை உறுப்பினர் குணசீலன் ஆகியோர் ஆர்வம் காட்டியிருந்தனர்.

ரெலோவின் பொதுச்செயலர் சிறீகாந்தா, மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *