மேலும்

இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் எரிவாயு இறக்குமதி முனையத்தை அமைக்க இணக்கம்

LNG-terminalஇந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் 250 மில்லியன் டொலர் செலவில், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தை உருவாக்கவுள்ளன.

சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகளுக்கு எதிராக ஜப்பானும், இந்தியாவும் இணைந்து முன்னெடுக்கும் முதல் கூட்டு நடவடிக்கை இது என்று இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவின் எரிபொருள் தேவையைக் கருத்தில் கொண்டு, 2 மில்லியன்  தொன் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையம் ஒன்றை சிறிலங்காவில் நிறுவும் திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய எரிவாயு இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெற் கடந்த ஆண்டு முன்மொழிந்திருந்தது.

இந்த திட்டத்தில் ஜப்பானும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்கா விருப்பம் வெளியிட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் பெட்ரோநெற் மற்றும் ஜப்பானிய நிறுவனம் என்பன 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் கூட்டு முயற்சியாக திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தை அமைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா, ஜப்பான் அரசாங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பெட்ரோநெற் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.

பெட்ரோநெற் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக இந்த திட்டத்தை செயற்படுத்தவுள்ள நிறுவனத்தை ஜப்பானிய அரசாங்கம் இன்னமும் முடிவு செய்யவில்லை.

கரவெலப்பிட்டியில் இந்த முனையம் அமைக்கப்படும். இறக்குமதி முனையத்தை கட்டுவதற்கு இரண்டரை தொடக்கம் மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதன் மூலம்  கப்பல்களில் இருந்து குளிரூட்டப்பட்ட திரவ எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும்.

கரவெலப்பிட்டியவில் உள்ள மின் நிலையத்துடன் இணைந்ததாக, 300 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எரிவாயு மின்திட்டத்தை சிறிலங்கா ஆரம்பிக்கவுள்ளது.

அங்கு தற்போது, எண்ணெயினால் இயக்கப்படும் மின் நிலையம், எரிவாயு இறக்குமதி முனையம் செயற்படத் தொடங்கியதும், எரிவாயு மின் நிலையமாக மாற்றப்படும்.

திரவ எரிவாயு மலிவானது என்பதால், பல நாடுகள் தமது மின் திட்டங்களை திரவ எரிவாயு திட்டங்களாக மாற்ற ஆரம்பித்துள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *