மேலும்

யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் – சம்பிக்க ரணவக்க

champika-ranawakaஎதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டில் யாழ்ப்பாண நகரத்தை கேந்திர நகரமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

ஒரு கேந்திர பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார, சமூக மற்றும் ஜனநாயக நிலையமாக யாழ்ப்பாணத்தை மாற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தலைவர்கள், நகரத்தின் கூறுகள், கலாசார பெறுமானங்கள், இயற்கை வளங்கள், முலதன சொத்துக் குழுக்கள், ஜனநாயக மற்றும் அரசியல் கூறுகள், இந்த அபிவிருத்தி திட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் திடீர் வெள்ளப் பிரச்சினை, கழிவு முகாமைத்துவம், மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

1980களுக்குப் பின்னர் போர் காரணமாக யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தடைப்பட்டது.

நடுத்தர வருமானம் கொண்ட பல குடும்பங்கள் தென்பகுதிக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.  போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் பொருளாதார செயற்பாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

ரொரன்ரோ, சிட்னி, லண்டன், பாரிஸ், பேர்லின் போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்காவில் உள்ள தமது உறவினர்களுக்கு கணிசமான நிதியை அனுப்புகின்றனர்.

இதனால், மதுபாவனை, போதைப் பொருள் பயன்பாடு போன்றன அதிகரித்துள்ளதாக யாழ்ப்ப்பாண மக்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனாலும் நடுத்தர வருமானம் கொண்ட புதிய சமூகம் இப்போது யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்று வருகிறது. அவர்களின் கனவுகள், தேவைகள், ஆற்றல், படைப்பாற்றல், நோக்கம் ஆகியவற்றை நிறைவேற்ற தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எனவே யாழ்ப்பாணத்துக்கு, தரமான நகரத்துக்கான உட்கட்டமைப்பு முறை, பௌதிக மற்றும் தொழில்நுட்ப சொத்துக்கள், மூலம், அவர்களின் தேவைகள் வர்த்தகம், முதலீடுகள் போன்றவற்றை நிறைவேற்ற முடியும்.

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உப்பு நீரை குடிநீராக சுத்திகரிக்க வேண்டும் அல்லது புதிய நீர்ப்பாசன முறை ஊடாக தீர்வு காண வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *