மேலும்

கொழும்பிலா- யாழ்ப்பாணத்திலா விசாரணை? – வித்தியா கொலை வழக்கில் இழுபறி

punkuduthivu-vithyaபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இந்த விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.

2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட ட்ரயல் அட்பார் முன்னிலையில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஹெய்யந்துடுவ, ஆச்சல வேங்கப்புலி, சம்பத் விஜேரத்ன  ஆகியோர் இந்த ட்ரயல் அட்பார் அமர்வுக்கு தலைமை நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் விசாரணையைக் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் 10 எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், 23 சாட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். சாட்சிகள் அனைவரும் தீவகத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள்.

இந்த நிலையில் விசாரணைகள் தமிழ் பேசும் நீதிபதிகளின் முன்னிலையில் யாழ்ப்பாணத்திலேயே நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தற்போது. வடக்கில் ஐந்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் பணியில் உள்ளனர். யாழ், மன்னார் மற்றும் வவுனியா மேல் நீதிமன்றங்களில், இளஞ்செழியன், இராமநாதன் கண்ணன், மனாப், மகேந்திரன், பிரேம்சங்கர் ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர்.

எனவே இவர்களில் மூவரை நியமித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விடயத்தில் இன்னமும் முடிவுகள் எடுக்கப்படாததால், விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *