மேலும்

சிறிலங்காவில் தடுப்பிலுள்ள ஆண்கள் மீது பாலியல் வதைகள் – அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு

toutureசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான சித்திரவதையாக, பாலியல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த All Survivors Project என்ற ஆய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆண்களும், இளைஞர்களும் இன்னமும் பரந்தளவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். ஆனால் அதுகுறித்த தகவல்கள் வெளிவருவதில்லை.

சமூக களங்கம் மற்றும் சட்ட ரீதியாக ஒருபாலுறவு குற்றம் என்பதாலும்,பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி வெளிப்படுத்த முன்வருவதில்லை.

37 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் வல்லுறவுகள் நிறைய இடம்பெற்றன. எனினும், பெண்கள் சம்பந்தமான வல்லுறவு வழக்குகளைப் போலன்றி,  தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஆண்கள் ஒப்புக் கொண்டது  அல்லது அதுபற்றிய பதிவுகள் குறைவாகவே உள்ளன.

போரின் போதும், போருக்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக, ஆண்கள் மீதான வல்லுறவுகள் இடம் பெற்றதற்கான பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் பற்றிய முழுமையாக தகவல்கள் தெரியவில்லை என்றாலும், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் நிறுத்தப்படவில்லை,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்ட ஆண்கள் பாலியல் வன்முறைகளை சந்திக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

40 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில்,  போருக்குப் பின்னர் காவல்துறை மற்றும் சிறிலங்கா படைகளின் காவலில் உள்ள ஆண் சந்தேக நபர்கள் எவ்வாறு கொடூரமாக, மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுகிறார்கள் என்று விபரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கருத்து “சிறிலங்காவில் தடுப்பிலுள்ள ஆண்கள் மீது பாலியல் வதைகள் – அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டு”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    இதுபற்றி டெல்லி எதுவும் பேசுமா? மூச்சுக்கூடவிடாது. தனது சொந்த மீனவர்களுக்காகவே அடக்கிகூட வாசிக்கத் தயராய் இல்லாத இந்தியா அண்டைநாட்டவனுக்காகவா மூச்சுவிடப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *