மேலும்

காலி கடற்படைத் தளத்தில் நெதர்லாந்தின் ஆயுதக்களஞ்சியம்

netherland- srilanka flagsஇந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் தமது நாட்டுக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை, நெதர்லாந்து அரசாங்கம் காலி கடற்படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கவுள்ளது.

சிறிலங்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் வகையில், தமது நாட்டுக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் நெதர்லாந்து கையெழுத்திடவுள்ளது.

சிறிலங்காவின் காலி துறைமுகத்தில் இருந்து நெதர்லாந்து பாதுகாப்பு பிரிவினர், கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.

இதற்காக, காலி கடற்படைத் தளத்தில் தேவையான ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்தி வைப்பது தொடர்பாக புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்து இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான பின்புலத் தளமாக சிங்கப்பூரையே நெதர்லாந்து பயன்படுத்தி வந்துள்ளது. எனினும், இதன் பயன்பாடுகள் குறைந்துள்ள நிலையில், காலி கடற்படைத் தளத்தைப் பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து கடற்படைத் தளபதி லெப்.ஜெனரல்  ரொப் வெர்கேர்க் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த காலி கலந்துரையாடல் என்ற கடல் பாதுகாப்பு மாநாட்டுக்காக சிறிலங்கா வந்திருந்த போது காலி கடற்படைத் தளத்தை ஆய்வு செய்திருந்தார்.

அதேவேளை, சிறிலங்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பாக, மே 9ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

சிறிலங்காவின் தளத்தைப் பயன்படுத்துவதற்கு நெதர்லாந்து கட்டணம் செலுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *