மேலும்

நிலமும் புலமும் நலவாழ்வும் – தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்

Tamil-Norwegian Resource Association (1)தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் (Tamil-Norwegian Resource Association) தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் (6-5-17) சனிக்கிழமை ஒஸ்லோவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினுடைய உருவாக்கம் தொடர்பான அறிமுகக் கூட்டமாகவும், தாயகத்திலுள்ள ‘வாசம் உதவும் உறவுகள்’ அமைப்புடன் இணைந்து ஏற்கனவே முன்னெடுக்கின்ற பணிகள் தொடர்பாகவும், தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பானதுமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்ற வகையிலான கலந்துரையாடலாக இச்சந்திப்பு அமைந்தது.

போருக்குப் பின்னான சூழலில் தாயக மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்திற்கும், வளர்ச்சிக்கும் உரிய விளைவுகளைத் தரவல்ல பணிகள் அவசியமானவை. அதற்கு இங்குள்ள வளங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. நிதியுதவி என்பதற்கு அப்பால் பல துறை சார்ந்த வளங்களை ஒருங்கிணைப்பதும் அதற்கூடாக தாயக மக்களுக்கு நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே தமிழ்-நோர்வே வள ஒன்றியம் தொடங்கப்பட்டுள்ளது.

வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் ஆலோசகர் வசந்தராஜா தம்பிப்பொடி மற்றும் அதன் இணைப்பாளர் விஜயராஜா விநாயகமூர்த்தி ஆகியோருடன் ஸ்கைப் வழியான நேரடிக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அவர்களது கருத்துரையைத் தொடர்ந்து கேள்விகளையும் கேட்பதற்கும் கருத்துகள் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்குமான நேரமாகவும் அமைந்தது.

போருக்குப் பின்னான தாயக நிலைமைகள், வாழ்வாதாரம் சார்ந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்த கருத்துகள் பகிரப்பட்டன.

Tamil-Norwegian Resource Association (3)Tamil-Norwegian Resource Association (1)Tamil-Norwegian Resource Association (2)

மட்டக்களப்பில் போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் வரிசையில் மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகளற்ற நிலையிலுள்ள, மயிலந்தனை கிராமத்தின் இன்றைய நிலை பற்றிய தரவுகள் தகவல்களும் அதனை முன்னேற்ற வேண்டிய தேவை குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு போரினால் முற்றாக இக்கிராமம் அழிக்கப்பட்டது. அப்போது 35 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். காயப்பட்டவர்களில் பலர் இன்றுவரை இயலாதவர்களாக உள்ளனர். இன்றுவரை அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது இக்கிராமம்.

குடிநீர்ப்பிரச்சினை, மருத்துவ வளமின்மை, போக்குவரத்து, கல்வி என அனைத்துவகைப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கின்றது மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கிராமம். அடிப்படை வசதியின்மை ஒருபுறமிருக்க, காட்டு விலங்குளின் (யானை) அச்சுறுத்தலையும் இக்கிராம மக்கள் எதிர்கொள்கின்றனர்.

”வாசம் உதவும் உறவுகள்” அமைப்பும், நோர்வே தமிழ் வள ஒன்றியமும் இணைந்து இக்கிராமத்தின் முன்னேற்றத்திற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழ் – நோர்வே வள ஒன்றியத்தின் இணையத்தளமும் (www.tnra.no) அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

அத்தோடு நோர்வே வாழ் தமிழ் மக்களின், நலவாழ்வு சார்ந்த மருத்துவக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. புலம்பெயர் வாழ்வின் நீட்சியில் மூத்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் நோய்கள், வாழ்க்கை முறை, உணவுமுறை குறித்த அக்கறையின்மைகள், அதன் விளைவுகள் சார்ந்த மருத்துவக் கலந்துரையாடலில் இளைய தலைமுறை மருத்துவர்களும் பங்கேற்றுத் தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *