மேலும்

ஈழத்தின் முன்னணி எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் காலமானார்

s.g.shanthanஈழத்தின் முன்னணி எழுச்சிப் பாடகரும், பிரபல இசைக்கலைஞருமான எஸ்.ஜி.சாந்தன் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் யாழ்.போதனா மருத்துவமனையில் காலமானார்.

சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஜி.சாந்தனுக்கு இன்று அதிகாலையில் இரண்டு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வந்த அவர், இன்று பிற்பகல் 2.10 மணியளவில் காலமானார் என்று யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கேள்வி ஞானத்தினால், வானொலி மற்றும் மேடை இசை நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் பங்கேற்றுப் பாடத் தொடங்கிய, எஸ்.ஜி.சாந்தன், 1990இல் விடுதலைப் புலிகளின் கலை பணபாட்டுக் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட எழுச்சிப் பாடல்களைப் பாடி உலகப் புகழ் பெற்றார்.

இசைவாணர் கண்ணனின் இசையில், சாந்தன் பாடிய ஏராளமான தமிழீழ எழுச்சிப் பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

s.g.shanthan

கணீர் என்ற குரலினால் தமிழ் மக்களின் மனங்களை வசீகரித்த சாந்தன், விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் மெளனிக்கும் வரையில் தமிழீழத் தேசிய எழுச்சிக்கான பாடல்களைப் பாடி வந்தார்.

சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த அவர் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டு, பல்வேறு இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

அண்மைக்காலமாக சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட சாந்தன், சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று காலமானார்.

அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் உறவுகள் மற்றும் இசை ரசிகர்களுடன், புதினப் பலகை குழுமமும் இணைந்து கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *