மேலும்

மகிந்தவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மறுத்த சிங்கப்பூர்

mahindaஅண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, தனியான பாதுகாப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அவருடன் சென்றிருந்த தனிப்பட்ட உதவியாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அப்போது அவர் வெளிவிவகார அமைச்சில் இருக்கவில்லை. அவர் திரும்பி வந்த பின்னர், தொலைபேசி அழைப்பு பற்றிய தகவல் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது

இதன் பின்னர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டாரவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்.

உதித் லொக்குபண்டார உடனடியாக, மகிந்த ராஜபக்சவிடம் தொலைபேசியைக் கொடுத்தார்.

அப்போது, சிங்கப்பூர் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தனக்குத் தனிப்பட்ட பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்று மங்கள சமரவீரவிடம் மகிந்த ராஜபக்ச கேட்டார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னின், உடன்பிறவா சகோதரரான, கிம் ஜொங் நம், பெண் ஒருவரால் கொடிய விசமுள்ள இரசாயனம் முகத்தில் பூசப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்தே, மகிந்த ராஜபக்ச அச்சமடைந்து தனிப்பட்ட பாதுகாப்புக் கோரியிருந்தார்.

இதையடுத்து மங்கள சமரவீர தனது நண்பரான சிங்கப்பூரின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான காசிவிஸ்வநாதன் சண்முகத்துடன் தொடர்பு கொண்டார்.

ஒரு நாள் கழித்து, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்திடம் இருந்து மங்கள சமரவீரவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

தமது புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டனர் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அதில் கண்டறியப்பட்டதால், அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இதனால் தனிப்பட்ட பாதுகாப்பு ஏதுமின்றி சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப வேண்டிய நிலை மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *