மேலும்

இந்தியா எம்மை நம்பவில்லை – கோத்தா

gota-udaya (1)மேற்குலகின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை இந்தியா நம்பவில்லை என்றும், மகிந்த அரசுக்கு எதிராகச் செயற்பட முடிவு செய்தது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியாவுடனான  எதிர்கால உறவுகள் மிகவும் முக்கியமானது. இதனை நாம் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு, இந்தியாவை அணுகியிருந்தோம்.

துரதிஸ்டவசமாக, இந்தியாவின் அரசாங்கம், காங்கிரசிடம் இருந்து பாஜகவிடம் மாறியது. புதிய அரசாங்கத்தின் சில அதிகாரிகள் சீனாவுடனான எமது உறவுகளை தவறாகப் புரிந்து கொண்டனர்.

ஒரு முறை இந்தியாவிலும், ஒரு முறை சிறிலங்காவிலுமாக இரண்டு தடவைகள் நான் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்தேன்.

அந்தச் சந்தர்ப்பங்களில் அவர், சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்து தாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று என்னிடம் கூறினார்.

நாம் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் திட்டவட்டமாக கூறினார்.

கொழும்பு துறைமுக தெற்கு கொள்கலன் முனையத்தின் முழு செயற்பாடுகளையும் எம்மை மீளப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கேட்டார்.

இவை முக்கியமான விடயங்கள். நான் அவருக்கு விளக்கமளிக்க முயன்றேன். இந்தியாவுக்கு எதிராக எதையும் செய்வதற்கு, சிறிலங்கா மண்ணை பயன்படுத்த யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று நாம் உத்தரவாதம் அளித்தோம்.

சீனாவுடனான எமது உறவுகள் வித்தியாசமானது, நாம் சீனாவுடன் நீண்டகால இராஜதந்திர உறவுகளை வைத்திருக்கிறோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எமது பொருளாதார அபிவிருத்திக்கு உதவக் கூடிய நிலையில் உள்ள ஒரே நாடு சீனா தான். எமக்கு அபிவிருத்தி அவசியம் தேவை. அதனால் இந்த உதவிகளை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

துரதிஷ்டவசமாக, அப்போது மேற்குலகின் தலையீடுகள் காரணமாக இந்தியா நம்பவில்லை. மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக செயற்பட இந்தியா முடிவு செய்தது.

அவர்களால் பெரியளவில் செய்ய முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லைக் கேட்கும். இந்திய வம்சாவளித் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. இவர்களை இந்தியா கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களால் நிறையச் செய்ய முடியும். இது ஒரு காரணி.” என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *