மேலும்

சீன உயர்மட்டக் குழு சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சந்திப்பு

chinese-deligates-sl (1)சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போது,  உண்மையான நண்பன் என்ற வகையில் சீனா, எதிர்காலத்திலும் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படும் என்று, அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சீன குழுவின் தலைவர் சொங் டாவோ உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்தும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்புகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

chinese-deligates-sl (1)chinese-deligates-sl (2)

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த சீன உயர்மட்டக் குழுவின் தலைவர் சொங் டாவோ, இந்தியப் பெருங்கடலின் கேந்திரமாக உருவெடுக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது, உள்நாட்டிலும், அனைத்துலக மட்டத்திலும், அரசியல் வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், சீனாவுடன் சிறிலங்கா தொடர்ந்து உறவுகளைப் பேணி வந்திருக்கிறது என்றும் சொங் டாவோ தெரிவித்தார்.

அதேவேளை, இரு தரப்பிடையேயும் உள்ள நட்பின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி பெறும் ஆசியாவை உருவாக்குவது தொடர்பாக புதிதாக ஆராய வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  சுட்டிக் காட்டினார்.

சிறிலங்கா  எப்போதும் நடுநிலைக் கொள்கையை பின்பற்றுகிறது. ஏனையோருக்கு அச்சுறுத்தலாகவோ இடையூறாகவோ இல்லாது அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவதே சிறிலங்காவின் தற்போதைய கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவொன்று கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில், சீனாவின் மற்றொரு உயர்மட்டக் குழு சிறிலங்கா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *