மேலும்

கீத் நொயார் கடத்தல் விசாரணையில் புதிய திருப்பம் – கோத்தாவே சூத்திரதாரி

Keith Noyahr -attackதி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தொடர்புபட்டிருந்தார் என்று கல்கிசை நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு மே 22ஆம் நாள், இரவு கடத்தப்பட்ட கீத் நொயார், தொம்பேயில் உள்ள இராணுவ இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். எனினும், சிவில் சமூக அமைப்புகள், அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திர தூதரகங்கள் கொடுத்த அழுத்தங்களை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று முன்தினம், மேஜர் புலத்வத்த உள்ளிட்ட மூன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளைக் கைது செய்தது.

இவர்களை கல்கிசை நீதிவான் முன்பாக நிறுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கீத் நொயார் தடுத்து வைக்கப்பட்டிருந்த தொம்பே இரகசிய வதைமுகாம் அமைந்திருந்த வீட்டை, மேஜர் புலத்வத்தவே தனது தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து வாடகைக்கு அமர்த்தியிருந்தார் என்று கூறினர்.

கீத் நொயாரைக் கடத்திய பின்னர், அதுபற்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் அமால் கருணாசேகரவுக்கு மேஜர் புலத்வத்த அறிவித்தார். அவர், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவுக்கு தெரியப்படுத்தினார்.

இதையடுத்து மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, கீத் நொயார் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு அறிவித்தார்.

உடனடியாக, மேஜர் புலத்வத்தவுக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோத்தாபய ராஜபக்ச பேசினார். சில உத்தரவுகளையும் வழங்கியிருந்தார் என்றும் நீதிவானிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இதுதொடர்பான முழு விபரங்களையும் சமர்ப்பிப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவியில் இருந்த போதே, இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

‘இராணுவம், இராணுவத் தளபதியில் தனிப்பட்ட சொத்து அல்ல’ என்ற தலைப்பில், கீத் நொயார் தி நேசன் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதையடுத்து, இந்தக் கடத்தல் இடம்பெற்றிருந்தால், சரத் பொன்சேகா மீது இந்தக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளை ஒத்த செயல்கள் குறித்து, சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நீண்ட வாக்குமூலம் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் கொடுத்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு தெரிந்தே பல கடத்தல்கள், கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் அவர் விபரித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *