மேலும்

ஹவாயில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்- சிறிலங்கா மேஜரை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

eagle-flag-usaசிறிலங்கா அரசாங்கத்தினால் சிறப்புப் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரி ஒருவர், அங்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அடுத்து  நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற இந்த மேஜர் தர அதிகாரி அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சிக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இவருடன் சேர்த்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் இரு அதிகாரிகளும், மூன்று இராணுவ அதிகாரிகளும் இந்தப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

ஹவாயில் பயிற்சி பெற்று வந்தபோது, கடந்த 9ஆம் நாள், விடுதி அறையில் தொழில்நுட்ப சீரமைப்பு பணிக்காக சென்ற பெண் ஒருவரை, சிறிலங்கா மேஜர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மேஜர், ஹவாய் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, உடனடியாக சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு நீதுிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் கடித மூலம்  அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலருக்கு கடந்த வாரம், அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரி, சனிக்கிழமை இரவு, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை, தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், துறைசார் மட்டத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய அதிகாரிகள் நால்வரும் தொடர்ந்து பயிற்சிகளை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *