மேலும்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

palanichamyதமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கடும் கொந்தளிப்புக்கு மத்தியில், தமது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ளார்.

இன்று காலை தமிழ்நாடு சட்டமன்றம் கூடிய போது, திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், இல்லையேல் ஒரு வாரத்துக்கு வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரினர்.

எனினும், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்கவில்லை. திறந்த வாக்கெடுப்கே நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இதற்கு எதிராக திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டனர். இதையடுத்து சபாநாயகர் பேரவையை 11 மணி வரை ஒத்திவைத்தார்.

அப்போது திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை பிடித்து இழுத்து, அவரது நாற்காலியை  சேதப்படுத்தினர். சபாநாயகரின் மேசை தள்ளி வீழ்த்தப்பட்டதுடன் ஒலிவாங்கியும் பிடுங்கியெடுக்கப்பட்டது.

சபாநாயகரை பெரும் போராட்டத்துக்குப் பின்னர், சபைக் காவலர்கள் மீட்டுச் சென்றனர்.

மீண்டும் சபை 11 மணிக்கு கூடிய போது, அவையில் குழப்பம் விளைவித்த திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதுடன் மாலை 3 மணி வரையில் பேரவையை ஒத்திவைத்தார்.

மீண்டும் சபை கூடுவதற்கு முன்னர் அங்கிருந்த  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் போது, தாம் தாக்கப்பட்டதாகவும் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், மாலை 3 மணியளவில் மீண்டும் சபை கூடிய போது, அதிமுக சார்பில் தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் உள்ளிட்ட 124 உறுப்பினர்கள் மாத்திரம் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியைச் சேர்ந்த 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதனால், பெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதேவேளை, தாம் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் நாட்டில் பல இடங்களிலும் திமுகவினர் போராட்டங்களை நடத்துவதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *