மேலும்

மூடி மறைக்கப்படும் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

Tony Abbott - Mahinda Rajapaksa1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன.

பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது.  அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன.

சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் கல்வி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தமிழ் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்புக்களும் தமிழ் மக்களுக்குப் புறக்கணிக்கப்பட்டன.

1983ல் தமிழ் மக்களுக்கு எதிரான அரச ஆதரவுப் படுகொலை இடம்பெற்றது. இதன் காரணமாக கொழும்பு மற்றும் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் வடக்கில் தஞ்சம் புகுந்தனர். சிங்கள பேரினவாதத்திடமிருந்து தமிழ் மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தனர். தனிநாட்டுக் கோரிக்கையைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயற்படத் தொடங்கின.

இவ்வாறு தோற்றம் பெற்ற இந்த யுத்தமானது 2009ல் முடிவுற்ற போது அதில் 80,000 வரையான தமிழ்ப் பொதுமக்களும் தமிழ்ப் புலிகளும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு அனைத்துலக சமூகம் பல்வேறு பலமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. குறிப்பாக ஐ.நா தலைமையில் அனைத்துலக நீதிமன்றால் இப்போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டன.

இதற்கு எதிராக சிங்கள தேசியவாதிகளால் பல்வேறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலியாவும் இப்பரப்புரையில் இணைந்து கொண்டது. சிறிலங்காவிலிருந்து தனது நாட்டிற்கு படகுகள் மூலம் வந்தடையும் புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது அவுஸ்திரேலியாவின் நோக்காகும்.

ஆகவே சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அத்தகைய ஆபத்து நிறைந்த நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்ப முடியாது. ஆகவே இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமானது சிறிலங்காவிற்கு ஆதரவாக நேரடியாகப் பரப்புரையில் ஈடுபட்டது.

Tony Abbott - Mahinda Rajapaksa

 சந்தர்ப்பவாதக் கூட்டு: முன்னாள் அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன்

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை என்கின்ற தனது கோட்பாட்டை மறைப்பதற்கான முழு ஆதரவை ராஜபக்ச அரசாங்கம் அவுஸ்திரேலியாவிலிருந்து பெற்றுக் கொண்டது. சிறிலங்காவிலிருந்து படகுகள் மூலம் தமிழ் மக்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக சிறிலங்காவின் காவற்துறை மற்றும் கடற்படையினருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவியது.

ஆனாலும் அவுஸ்திரேலியாவிலிருந்து சட்டத்திற்கு முரணாகத் திருப்பி அனுப்பப்படும் தமிழ் மக்கள் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆட்கடத்தல்களில் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்சவே ஈடுபடுவதாக அறிந்த போதிலும், அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினருக்கு ரோந்துப் படகுகள் வழங்கப்பட்டன.

குறித்த சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் இவ்வாறான சித்திரவதைகளை நியாயப்படுத்தலாமே ஒழிய இது தொடர்பில் வெளிவந்துள்ள அறிக்கை அசாதாரணமானது என 2013ல் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது அவுஸ்திரேலியப் பிரதமர் ரொனி அபோற் தெரிவித்தார்.

சிறிலங்காவில் பல்வேறு சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான சகல சாட்சியங்களும் உள்ள போதிலும், தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கிற்காகவே இவ்வாறு சட்டரீதியற்ற வகையில் நாட்டிற்குள் உள்நுழைவதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார் தெரிவித்திருந்தார். இதேபோன்றே இவரைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த ஜூலி பிசப்பும் தெரிவித்திருந்தார்.

சிறுபான்மைத் தமிழ் மக்களே சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமானவர்கள் என்பதே அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் நிலைப்பாடாக இருந்துள்ளது. சிங்களவர்கள் யுத்தத்தை வென்றுள்ளனர் எனவும், நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது அத்துடன் இதனைத் தமிழ் மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அவுஸ்திரேலியாவின் கோட்பாடாகக் காணப்படுகிறது.

அதாவது வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு நிலவுகிறது, தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன, தமிழ் மக்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளன, தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், தமிழ் மக்கள் நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவ்வாறான பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்ற போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை தமிழ் மக்கள் ஏற்றேயாக வேண்டும் என்பதே அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் நிலைப்பாடாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை 2013ல் பிறேமனில் இடம்பெற்ற போது அதில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் திட்டமிட்ட படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இன்றும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலை தொடர்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதாவது தமிழ் ஆயுதக் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை, இவர்கள் மிகத் தீவிர காயங்களுக்கும் மன வடுவிற்கும் உள்ளாகியமை போன்றன நிரூபிக்கப்பட்டன.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கமானது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு அனுமதிக்கப்படும் என 2015ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

எனினும், அனைத்துலக விசாரணையை எதிர்த்து சிறிலங்காவிற்குள் அழுத்தம் அதிகரித்து வருவது தொடர்பாக அதிபர் சிறிசேன பதிலளித்திருந்தார். அதாவது மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக சமூகத்தை உள்ளடக்கிய போர்க் குற்றச்சாட்டு விசாரணையைத் தான நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த விசாரணை இடம்பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் இதன் மூலம் சிறிலங்கா தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும் எனவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் 2016 மார்ச் மாதம் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது தெரிவித்திருந்தார்.

ஐ.நா வின் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எவ்வித நிர்ப்பந்தத்தையும் சிறிலங்கா மீது அவுஸ்திரேலியா வழங்கவில்லை. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த இலங்கையர்கள் அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவர் என 2016 ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றோன் கட்டளையிட்டிருந்தார்.

ஆங்கிலத்தில்  – Bruce Haigh
வழிமூலம்        – The age
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *