மேலும்

15 பேரின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க அலரி மாளிகைச் சந்திப்பில் இணக்கம்?

temple trees- meeting (1)காணாமலாக்கப்பட்டோரின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், காணாமலாக்கப்பட்ட 15 பேர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அளித்த வாக்குறுதிக்கு அமைய அலரி மாளிகையில் சிறிலங்காவின் மூத்த அமைச்சர்களுக்கும், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், நேற்றுக்காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்றுக்காலை 11 மணியளவில் ஆரம்பித்த இந்தச் சந்திப்பில், அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் அரசாங்கத் தரப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும், அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில், 10 பெண்களும், கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மனித உரிமைகள் சட்டவாளர் இரத்தினவேலும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

temple trees- meeting (2)

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள், அரசதரப்புடன் தாம் தனியாகப் பேச்சு நடத்த வேண்டும் என்று கோரினர்.

அதற்கு, வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்ந்தும், கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாலேயே தாம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், சந்திப்பில் இருந்து எழுந்து சென்றனர்.

இதையடுத்து நடந்த பேச்சுக்களின் போது, காணாமற்போனோருக்கான பணியகத்தின் மூலம் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர்கள், விளக்கமளித்தனர்.

எனினும், தமது பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, சந்திப்பில் பங்கேற்ற குழுவினர் வலியுறுத்தினர்.

ஒன்றரை மணித்தியாலங்களாக இந்தப் பேச்சுக்கள் நீடித்தன. பேச்சுக்களின் நடுவே, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் எழுந்து சென்று விட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மாத்திரம், கடைசி வரையில் சந்திப்பில் பங்கேற்றார்.

இறுதியில், காணாமற்போனோர் பணியக சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன்,  15 குடும்பங்களின் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதற்கு அமைச்சர் ருவான்விஜேவர்த்தன இணங்கியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சந்திப்பில் பங்கேற்ற காணாமற்போனோரின் உறவினர்கள், கொழும்பில் நேற்று மாலை நடத்தி்ய செய்தியாளர் சந்திப்பில், 15 பேரின் விவகாரங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வைத்த யோசனையை தாம் நிராகரித்து விட்டதாகவும், இந்தப் பேச்சுக்களில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *