ஜெனிவாவில் மற்றொரு தீர்மானமா? – சிறிலங்கா நிராகரிப்பு
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிடுகையில்,
“சிறிலங்காவுக்கு பாதகமாக மற்றொரு தீர்மானம் ஜெனிவாவில் கொண்டு வரப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை பிற்போடச் செய்வதற்கான முயற்சியில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவை முற்றிலும் பொய்யான தகவல்களாகும். சிறிலங்காவுக்கு எதிராக எந்த தீர்மானமும் கொண்டுவர அனைத்துலக சமூகம் முயற்சிக்கவில்லை.
வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்காவுக்குப் பாதகமான எந்த விடயமும் இடம்பெறாது. அதனை உறுதியாக கூற முடியும்.
மார்ச் முதல்வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்று, சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுவார்.
ஜெனிவா தீர்மானத்தில் அதிகமானவற்றை சிறிலங்கா நிறைவேற்றியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதயசுத்தியுடன் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்துலக சமூகம் முழு ஆதரவை வழங்கி வருகிறது.
நாம் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் காரணமாக அனைத்துலக மட்டத்தில் நற்பெயர் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சிறிலங்காவுக்கு எதிராக வேறு பிரேரணைகள் கொண்டு வரப்படுமென நம்ப முடியாது.
சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையை பிற்போடுவது குறித்து பேச அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த அமெரிக்கா சென்றுள்ளதாகவும், அவர் நேற்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பில் அமெரிக்காவுடன் பேசுவதானால் வெளிவிவகார அமைச்சர் தான் அங்கு செல்ல வேண்டும். அமைச்சர் சுசில் செல்ல தேவையில்லை. இதில் உண்மை கிடையாது. ” என்றும் அவர் குறிப்பிட்டார்.