மேலும்

ரவிராஜ் கொலை வழக்கு – மீளாய்வு மனுவை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு

N.Ravirajமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்றினால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, அவரது மனைவி சார்பில், தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள  மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கில்  ஜுரிகள் சபை முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தத் தீர்ப்பிற்கு எதிராக ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரோ அல்லது அவர் சார்பாக எந்தவொரு சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் இந்த மனு கடந்த 19 ஆம் நாள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இந்த மனுவை மீண்டும் மீளாய்வு செய்யுமாறு சசிகலா ரவிராஜ் மீளாய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 19 ஆம் நாள் மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு தான் கேட்டிருக்கவில்லை என்றும் அன்றைய தினம் மனுதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை தான் அறிந்திருக்கவில்லையென்றும் எனவே நீதிமன்றத்தில் தம்மால் முன்னிலையாக முடியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டே சசிகலா ரவிராஜ் மீளாய்வு கோரிக்கையை விடுத்திருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர, லலித் ஜயசூரிய ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது மனுதாரரின் மனுவை எதிர்வரும் மார்ச் 3 ஆம் நாள் மீளாய்வு செய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *