மேலும்

உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய வழக்கு – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

Mi-24ஆனையிறவு அருகே, கொம்படி வெளியில் சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ- 24 தாக்குதல் உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படை அதிகாரிகளுக்கு  மரணத்தை விளைவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

1999 டிசெம்பர் 17ஆம் நாள், ஆனையிறவு அருகே சிறிலங்கா விமானப்படை எம்.ஐ- 24 தாக்குதல் உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படை அதிகாரிகளுக்கு  மரணத்தை விளைவித்தார் என்று மானிப்பாயைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற முன்னாள் போராளி மீது யாழ். மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2013ஆம் ஆண்டு இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம், பூசா தடுப்பு முகாமில் வைத்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரின் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.

முகத்தில் சவர அலகினால் காயப்படுத்தப்பட்டு தன்னிடம் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக சந்தேக நபர் சாட்சியமளித்திருந்தார்.

குற்றஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் வேறு சாட்சியங்களை முன்னிலைப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் கால அவகாசம் கோரியிருந்தது.

இதற்கென வழங்கப்பட்ட ஒரு வார காலஅவகாசத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து எந்த அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம் 7ஆம் நாளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அன்றைய நாளில் சந்தேக நபரை யாழ். மேல்நீதிமன்றம் விடுவிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *