மேலும்

சீனக்குடா குதங்களை வழங்க இந்தியா மறுப்பு – 4 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கிறது சிறிலங்கா

trincomalee oil farmசீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.

வரட்சியை எதிர்கொள்வதற்காக மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளப் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த போதும், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெய்க் குதங்களை மீள வழங்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் புதிய இந்தியத் தூதுவர் பொறுப்பேற்கும் வரை இதுதொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சிறிலங்கா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் டீசலை சேமித்து வைப்பதற்கு தாங்கிகள் அவசரமாகத் தேவைப்படுவதால், முத்துராஜவெலவில் நான்கு தாங்கிகளை அமைக்க சிறிலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.

முதலாவது எண்ணெய் தாங்கியை அமைப்பதற்கு கோரப்பட்ட கேள்விப்பத்திரம் மூடப்பட்டுள்ளது. இதற்கு 400 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாங்கிகள் ஒவ்வொன்றும் 15 ஆயிரம் மெட்றிக் தொன் எரிபொருளை சேமித்து வைக்கக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளன.

மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை வாங்கி வந்த சிறிலங்கா மின்சார சபை, இந்த மாதம், மேலதிகமாக 60 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை வழங்குமாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *