மேலும்

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க நாசகாரி கப்பலுக்கு, கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் பலநோக்கு போராயுத வசதிகளைக் கொண்ட இந்த நாசகாரி கப்பல், பேர்ள் ஹாபரில் இருந்து இயங்கி வருகிறது.

தற்போது இந்த நாசகாரி, இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

வரும் 23ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் அமெரிக்க நாசகாரி கப்பல், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளது.

USS Hopper colombo (1)USS Hopper colombo (2)USS Hopper colombo (4)USS Hopper colombo (3)

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐந்தாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவாகும்.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்துக்கு யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஓர்லியன்ஸ், யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ஆகிய அமெரிக்க போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கும், யுஎஸ்எஸ் சோமசெற் போர்க்கப்பல், திருகோணமலை துறைமுகத்துக்கும் கடந்த ஆண்டில் பயணம் மேற்கொண்டிருந்தன.

அதேவேளை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், சிறிலங்கா கடற்பரப்புக்கு அருகாக பயணத்தை மேற்கொண்டிருந்த போது யுஎஸ்எஸ் ஹொப்பர் நாசகாரியின் மாலுமி ஒருவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் நுழைந்திருந்தது.

அந்த மாலுமி சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *