மேலும்

ஹொரவபொத்தானையில் கலகம் செய்த 16 சிறிலங்கா படையினர் கைது

Brig. Roshan Seniviratneஹொரவபொத்தானை நகரில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஹொரவபொத்தானையில், புத்தாண்டை முன்னிட்டு, கடந்த டிசெம்பர் 31ஆம் நாள் இரவு இசை நிகழ்ச்சி இடம்பெற்ற போது இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் நடந்தது.

இந்த மோதல்களில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், 10 பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அவர்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்கியிருந்தார்.

கைது செய்யப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் நேற்று முன்தினம் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை, தமது இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர், சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹொரவபொத்தானை இராணுவ முகாமைச் சேர்ந்த 5 ஆவது கஜபா படைப்பிரிவு இராணுவத்தினர் நகரில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி கலகம் விளைவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், 16 சிறிலங்கா இராணுவத்தினர் , இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

அதேவேளை, ஹொரவபொத்தானை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் தர அதிகாரி உடனடியாகவே அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த இராணுவ முகாமில் பணியாற்றிய அனைத்துப் படையினரும், வேறு முகாம்களுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

இராணுவப் பொலிசாரின் விசாரணைகளின் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *