மேலும்

சிறிலங்கா: ஆசியாவின் அடுத்த மையம்?

us-india-chinaஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.

இவ்வாறு free press journal ஊடகத்தில், Sunanda K Datta-Ray எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

புவியில் சிறிலங்கா என்கின்ற தீவானது எப்போதும் ஒரு சிறியதொரு நாடாகவே காணப்படுகிறது.  முன்னர் சிலோன் என அழைக்கப்பட்ட சிறிலங்காவின், பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல பண்டுங் மாநாட்டில் அப்போதைய நவநாகரீகப் போக்கை எதிர்த்ததுடன் சீனாவிற்கு எதிரான உரை ஒன்றை நிகழ்த்திய போது, இந்தியப் பிரதமர் ஜவர்கலால் நேரு, விரைந்து சென்று ‘சேர் ஜோன், ஏன் தங்களுடைய உரையை எனக்குக் காண்பிக்கவில்லை?’ என வினவினார்.

‘ஏன் நான் அவ்வாறு செய்ய வேண்டும்? நீங்கள் தங்களுடைய உரையை என்னிடம் காண்பித்தீர்களா?’ என ஜோன் கொத்தலாவல, நேருவிடம் வினவினார் என வரலாறு கூறுகிறது.

இதையொத்த சர்ச்சையொன்று 1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது கொழும்பிற்கான அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய ரெரசிற்றா ஸ்காபர், ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ என்ற அமெரிக்காவின் பன்னாட்டு ஒலிபரப்பு நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஒலிபரப்பியை சிறிலங்காவில் நிறுவுவதற்கு ஆதரவு வழங்கினார்.  சிறிலங்கா இதற்கு ஆதரவளித்த போதும், இதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டது.

இதுபோன்றே தற்போது அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சர்ச்சைகள் இடம்பெறுகின்றன. அதாவது இந்தியா தனது பிராந்திய மற்றும் அனைத்துலகக் கடமைகளை ஒருமுகப்படுத்தி உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா பல்வேறு போராட்டங்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில், இவ்விரு துறைமுகங்களின் எதிர்காலம் தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.

இந்தியாவிடம் ஆலோசனைகள் பெறாது, சிறிலங்கா சொந்தமாகத் தீர்மானம் இயற்றுவது தொடர்பில், இந்தியா அவ்வளவு மகிழ்ச்சியடையாது  என விமர்சகர்கள் கருதினாலும் கூட, இவ்விரு நாடுகளும் ஒரே தரப்பிலேயே இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.

ஆனால் சீனா என்பது இங்கு பிறிதொரு விடயமாகும். சீனா தனது ‘சகல காலநிலை நண்பன்’ எனக் கூறப்படும் பாகிஸ்தானில் மட்டுமல்லாது, நேபாளம், பங்களாதேஸ் மற்றும் மியான்மார் போன்ற இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளில் தனது திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. இந்த நாடுகளைச் சூழவுள்ள கடற்பிரதேசத்திலும் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.

டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில், சீனாவின் Merchant Port Holdings  என்கின்ற நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான 1.12 பில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கை ஒன்றிற்குள் சிறிலங்கா நுழைந்தது.

இது வெறும் புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டுமே என சிறிலங்காவின் துறைமுக அமைச்சர் அர்ஜூன றணதுங்க தெரிவித்துள்ள போதிலும், இந்திய மாக்கடலின் பூகோள கேந்திர முக்கியத்துவம் மிக்க கடல்வழியில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால் இது மிக முக்கிய கேந்திர மையங்களில் ஒன்றாக உள்ளது.

சீனாவுடனான ராஜபக்ச அரசாங்கத்தின் நெருக்கமான உறவை இந்தியா எதிர்த்திருந்தது. இதனால் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான தனது முழுமையான எதிர்ப்பையும் 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் இந்தியா காண்பித்ததாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவருமான கோத்தபாய ராஜபக்ச நம்புகிறார்.

இத்தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு சில வாரங்களின் முன்னர் காத்மண்டுவில் இடம்பெற்ற சார்க் பிராந்திய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தபோது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியா தனது தேசிய நலனில் இரட்டை வேடங்களைக் கொண்டிருந்தது என்பது மட்டுமே எதிர்பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

சீனாவுடன் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா இரத்துச் செய்ய வேண்டும் எனவும்  சீனா மற்றும் சிறிலங்கா துறைமுகங்கள் அதிகார சபையால் இணைந்து உருவாக்கப்பட்ட கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய நிறுவனத்தை சிறிலங்காவே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் இந்தியா விரும்பியதாக ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தார்.

‘சீன நிதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமாணத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும் அத்துடன்  அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறிலங்கா தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்’ என்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தன்னிடம் தெரிவித்ததாக ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

‘சிறிலங்கா ஒரு சிறிய நாடு, ஆகவே இந்தச் சிறிய நாட்டிற்கு இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தேவையில்லை’ என டோவல் தெரிவித்ததாக ராஜபக்ச கூறியிருந்தார்.

அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஆகிய மட்டும் சர்ச்சைக்குரிய விடயங்களல்ல. திருகோணமலையில் அமெரிக்கா தனது கடற்படைத் தளம் ஒன்றை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரன உறுதிப்படுத்திய போது, இவர் நாட்டின் எந்தவொரு இரகசியத்தையும் வெளியிடவில்லை.

தென் சீனா மற்றும் கிழக்குச் சீனக் கடல்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமை, அமெரிக்காவில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் – தாய்வான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியமை, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சீனா கைப்பற்றியமை போன்ற பல்வேறு விடயங்கள் திருகோணமலை மீதான அமெரிக்காவின் ஆர்வம் அதிகரிக்கத் துணைபோயின.

ஆனால் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.

இந்திய மாக்கடலில் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்காவானது ஒரு அனுசரணையாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க முடியும் என அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் பிங்க்லி ஹரிஸ், அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடாத்திய பின்னர் தெரிவித்திருந்தார்.

இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பூகோள செயற்பாட்டு முறைமையை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கு ஒத்த கருத்துக்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் சிறிலங்கா புரிந்துகொண்டு பங்களிப்பதை வரவேற்பதாகவும் பசுபிக் கட்டளைத் தளபதி தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதையே சிலர் 2017ல் நடைபெறவுள்ள மலபார் இராணுவப் பயிற்சி நடவடிக்கையில் இந்திய, அமெரிக்க, யப்பானியக் கடற்படையினருடன் இணைந்து சிறிலங்காவும் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.

‘நாங்கள் 21வது மலபார் பயிற்சி நடவடிக்கையை மேலும் பெரிதாகவும் மேலும் விரிவுபடுத்தவும் விரும்புகிறோம்’ என அமெரிக்காவின் ஏழாவது கடற்பிரிவின் துணை அட்மிரல் ஜோசப் பி ஓகொய்ன், அண்மையில் சிறிலங்காவிற்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பாவுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

‘நிர்மூழ்கி எதிர்ப்பு போர் முறையானது மிகவும் பயனுள்ளதாக அமையும் என நான் நினைக்கிறேன். இந்தியக் கடற்படையுடன் இணைந்து  p-81 பொசெய்டன் நீண்ட தூர கடற் கண்காணிப்பு வான்கலமானது கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறது. இவை இரண்டும் இணைந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாட முடியும்’ என துணை அட்மிரல் ஜோசப் பி. ஓகொய்ன் தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பில் அடிக்கடி சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நிற்பதுடன் வைத்துப் பார்க்கும் போது, இப்பிராந்தியத்தில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் முறைகளை புதுப்பிக்க வேண்டும் என்கின்ற அட்மிரல் ஹரிசின் வலியுறுத்தலில் எவ்வித ஒளிவுமறைவையும் காணமுடியாது.

பராக் ஒபாமாவின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் ஜோன் கெரி அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராக பதவியேற்பதற்கு முன்னர், செனற்றின் வெளியுறவுக் குழுவின் அறிக்கையை வெளியிடும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்திருந்த போது அமெரிக்காவின் சிறிலங்கா மீதான பூகோள-கேந்திர முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவை ஆட்சி செய்யவுள்ள ட்ரம்ப் நிர்வாகமானது இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா மீதான அமெரிக்காவின் நலன்களைக் கண்டறியுமானால், சிறிலங்காவானது ஆசியாவிற்கான அடுத்த முக்கியத்துவம் மிக்க மையமாக மாற முடியும்.  இது உண்மையான விடயமாகும்.

இந்திய மாக்கடலில் அமெரிக்காவானது ‘அறைக்குள் அகப்பட்ட யானை’ போன்று இக்கட்டான சூழலில் மாட்டியுள்ளதாக விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். உலக ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவானது இந்திய மாக்கடலில் தன்னை நிலைநிறுத்த வேண்டியதன் உண்மைத்தன்மை அறிந்து கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கருத்திலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான சிறிய நாடு – பெரிய நாடு உறவுநிலையானது, சிறிலங்காவானது எந்தவொரு சூழ்நிலையிலும் தனது இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னிச்சையாக இந்தியாவை ஒருபோதும் உதறித்தள்ளாது என்பதையே சுட்டிநிற்கிறது.

சிறிலங்கா எப்போதும் கடல் சார் நடவடிக்கைகள் தொடர்பில் தங்கிவாழும் ஒரு நாடாகும் என சில அறிக்கைகள் சுட்டிநிற்கின்றன. சிறிலங்காவில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தின் விளைவாகவே இதன் கடல்சார் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக ஏனைய ஊடகங்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்களால் உணவுப் பொதிகள் வீசப்பட்ட இந்தியாவின் கழுகு நடவடிக்கையானது (ஒப்பரேசன் Eagle) தனது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்குக் களங்கம் விளைவித்ததாக சிறிலங்கா பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தது.

ஆயுதம் தாங்கிய யாழ்ப்பாண தமிழ் இளைஞர்களிடமிருந்து அப்துல் கயூமை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கக்ரஸ் (ஒப்பிரேசன் cactus) நடவடிக்கைக்கு மாலைதீவு நன்றியுணர்வை வெளிப்படுத்தியது. ஆனால் அவ்வாறு சிறிலங்கா நன்றி பாராட்டவில்லை. இந்திய அமைதி காக்கும் படையால் முன்னெடுக்கப்பட்ட பவான் இராணுவ நடவடிக்கையின் (ஒப்பரேசன் pawan) துன்பகரமான முடிவானது சிலருக்கு குறிப்பாக பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க தவறியிருக்க மாட்டாது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டின் தென்முனையிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீதத்தை விற்க விரும்புகிறது. ஆனால் இது பொருளாதார நோக்கத்துடனேயே இதனை மேற்கொள்கிறதே அன்றி அரசியல் காரணத்திற்காக இல்லை.

ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த இடதுசாரி அமைச்சர் ஒருவர் அம்பாந்தோட்டை வழக்கை உச்ச நீதிமன்றுக்கு மாற்றுவதை எதிர்த்து அச்சுறுத்தல் விடுத்தமையானது, உள்நாட்டு அரசியல் பகைமையாகவே கருதமுடியும். இதுபோன்ற சம்பவமே நீண்டகாலத்துக்கு முன்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் சிறிலங்காவை  ஸ்தாபக உறுப்பினராக இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.

ASEAN  உறுப்பு நாடாவதன் மூலம் சிறிலங்காவானது, தெளிவாக வரையறுக்கப்பட்ட ஆசியாவின் அடையாளமாக மாற விரும்பலாம். பதிலாக, இது இந்தியாவின் நிழலாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலையில் உள்ளதாக உணர்கிறது. தற்போதும் இச்சிறிய தேசமானது இந்தப் பூமியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு நாடாக வேண்டுமென ஏங்குகிறது.

வழிமூலம்      – free press journal
ஆங்கிலத்தில் – Sunanda K Datta-Ray
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *