மேலும்

சென்னையைப் புரட்டிப் போடும் வர்தா புயல் – கொள்கலன்களை கூட தூக்கி வீசுகிறது

chennai-vardha-1வங்கக் கடலில் உருவாகிய வர்தா புயல் தற்போது சென்னை அருகே கரையைக் கடந்து கொண்டிருப்பதால், மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி பெரும் சேதங்களை விளைவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நண்பகலுக்குப் பின்னர் சென்னைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட வர்தா புயல் தற்போது, கரையைத் தொட ஆரம்பித்துள்ளது.

இதனால் கடந்த சில மணித்தியாலங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.

வீதியோரத்தில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், காற்றில் பறக்கின்றன. வீதியில் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

திருவொற்றியூரில் கொள்கலன் முனையத்தில் வைக்கப்பட்டிருந்த 10 கொள்கலன்கள் காற்றில் தூக்கி வீடுகளின் மீது வீசப்பட்டுள்ளன.

சென்னை- சென்ட்ரல் தொடருந்து நிலையக் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு நகர்த்தப்படுகின்றனர்.

மக்களை வெளியே வரவேண்டாம் என்று தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது. புயல்மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சென்னை இருள்மண்டியுள்ளது.

chennai-vardha-1chennai-vardha-2chennai-vardha-3chennai-vardha-4chennai-vardha-1

புயலினால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தால், மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இருளில் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

சென்னையில் கடும் மழையுடன் வீசும் புயலினால், அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. சென்னைய விமான நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை தொடக்கம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர், கடற்கரை தொடருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து தொடருந்துகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சென்னையைத் தாக்கியுள்ள மிகத் தீவிரமான புயலாக இது அமைந்துள்ளது. இந்தப் புயலினால் பெரும் சேதங்கள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரையில் சென்னை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 12 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாகவும், இதனால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர்மட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *