மேலும்

சிறிலங்காவின் சிறப்புவாய்ந்த நண்பன் சீனா – ராஜித சேனாரத்ன

rajitha senaratneசீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு நாளுக்கு நாள் பலமடைந்து வருவதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீன மருத்துவர்களால் நாகொட மருத்துவமனையில் 500 பேருக்கு கண் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“சிறிலங்காவின் அபிவிருத்திக்கு சீனா ஏற்கனவே குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கியுள்ளது.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், உயர்நீதிமன்ற வளாகம், மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள் என்று பல்வேறு உதவித் திட்டங்களை சீனா மேற்கொண்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு, மருந்து தரச் சோதனைக்கான ஆய்வகம், பொலன்னறுவவில் சிறுநீரக மருத்துவமனை ஆகியவற்றை சீன அரசாங்கம் கட்டித்தரவுள்ளது.

1.5 பில்லியன் டொலர் பெறுமதியில் துறைமுக நகரைக் கட்டும் பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளது. இது சீனாவிடம் இருந்து கிடைத்துள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

சிறிலங்காவுக்கு சீனா ஒரு சிறப்புவாய்ந்த நண்பன்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சின்னச்சின்ன விவகாரங்கள் இருந்தன.

ஆனால் இப்போது எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. இரண்டு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கின்றன.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *