மேலும்

சிறிலங்காவும் சித்திரவதைகளும் – நியூயோர்க் ரைம்ஸ்

சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஆச்சரியமூட்டும் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் பணியாற்றியுள்ளது என்பது தொடர்பாக கடந்த புதனன்று சித்திரவதைகளுக்கு எதிரான  ஐக்கிய நாடுகள் சபை ஆணைக்குழு வினவியது.

சிறிலங்கா காவற்துறையால் தொடர்ந்தும் சித்திரவதைகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், 2009ல் நிறைவுற்ற 26 ஆண்டுகால கொடிய யுத்தத்தின் இறுதியில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பல்வேறு போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்ட போதிலும் அவை தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்குவதற்கு சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாகவும் ஐ.நா ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.

ஜெனீவாவில் நவம்பர் மாத முடிவில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற ஐ.நா ஆணைக்குழுவான ‘சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழு’ வில் மாநாட்டின் போது சிறிலங்காவில் தொடரப்படும் சித்திரவதைகளும் ஆராயப்பட்டன. சிறிலங்கா காவற்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் திணைக்களத்தால் தொடர்ந்தும் இவ்வாறான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவது தொடர்பில் கவலை கொள்வதாக சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழு தெரிவித்தது.

இவ்வாறான சித்திரவதைகள் தொடர்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகத் தயக்கம் கொள்வது தொடர்பாகவும் சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

‘பாதுகாப்புத் துறையில் நிறுவக ரீதியான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை’ என சிறிலங்காவின் மனித உரிமை நிலைப்பாடு தொடர்பாக ஆராய்ந்த ஆணைக்குழுவில் அங்கம் வகித்த இரண்டு வல்லுனர்களில் ஒருவரான பீலிஸ் டி. காயர், ஜெனீவாவில் நடாத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

‘சிறிலங்காவால் வாக்குறுதி வழங்கப்பட்ட பல்வேறு விடயங்கள் இன்னமும் நிறைவுபடுத்தப்படாது உள்ளது. ஆகவே இங்கு தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுகின்ற போதிலும் அது தொடர்பாக விசாரணை செய்யப்படாத நிலை காணப்படுகிறது’ என காயர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதிபர் சிறிசேனவும் நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், நாட்டின் பலம்மிக்க பாதுகாப்புத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் அச்சம் கொள்வதன் காரணமாக இதில் தாமதம் காண்பிப்பதாக சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது 40,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா வல்லுனர் குழு மதிப்பீடு செய்தது. அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் பலவந்தக் காணாமற்போதல்கள் போன்ற பல்வேறு பயங்கரமான மீறல்கள் இடம்பெற்றுள்ளதை விசாரணையாளர்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை அதிபர் சிறிசேன தேர்தலில் வெற்றி கொண்ட பின்னர், உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவேன் எனவும் போரின் போது காணாமற் போன பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்வதற்கான அலுவலகம் ஒன்றையும் உருவாக்குவேன் எனவும் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிசார் பொறிமுறை ஒன்றை உருவாக்குவேன் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட வேண்டிய மனித உரிமை தொடர்பான கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றிலிருந்து தனது நாட்டை விடுவிப்பதற்கு உதவுமாறு அமெரிக்காவில் தற்போது அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ஜே ட்ரம்ப்பிடம் எழுத்து மூலம் அதிபர் சிறிசேன கடந்த மாதம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் உதவுமாறு தற்போது ஐ.நா செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போர்த்துக்கலைச் சேர்ந்த அன்ரோனியோ குரெரெசிடமும் கோரிக்கை வடுவதற்கும் சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

‘சிறிசேன தனது நாட்டை போர்க் குற்ற வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ட்ரம்ப்பில் உதவி கோருவது உண்மையாக இருந்தால் இது ஏற்கனவே நடைமுறையிலுள்ளதையே மீளவும் செயற்படுத்தத் தூண்டுகிறது’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவைச் சேர்ந்த சிறிலங்கா வல்லுனர் அலன் கீனன் தெரிவித்தார்.

‘ஏற்கனவே அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க ஆகியோர் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலத்தை இழுத்தடிக்கிறார்கள் என்கின்ற சந்தேகம் காணப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல இந்தச் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது’ என அலன் கீனன் தெரிவித்தார்.

கடந்த யுத்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பணியாற்றுவதற்காக சிறிசேனவால் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டம் போன்ற சில பொறிமுறைகள் உருவாக்கப்பட்ட போதிலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாகவும் பல்வேறு மீறல்கள் தொடர்பாகவும் விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான எவ்வித சட்ட நடவடிக்கையையும் சிறிசேன முன்னெடுக்கவில்லை என சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் சிறிலங்காவில் தற்போதும் தொடரும் வெள்ளை வான் கடத்தல்கள், மறைவான தடுப்புச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமற் போனவர்கள் போன்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாகவும் சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நம்பகமான சாட்சியப் பாதுகாப்பற்ற நிலையில் தொடர்ந்தும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிசும் அங்கம் வகித்தமை சிறிலங்காவில் எவ்வளவு தூரம் மனித உரிமை மதிக்கப்படுகிறது என்பதற்கான ஒரு எச்சரிக்கையை எழுப்பியுள்ளதாகவும் காயர் குறிப்பிட்டார்.

மெண்டிஸ் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற யூன் 2009ற்கு முன்னர் 15 மாதங்களாக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பிரதி காவற்துறை மா அதிபராகக் கடமையாற்றியிருந்தார்.

‘யுத்தத்தின் நிறைவில் சிறிலங்காவில் இயங்கிய தடுப்பு நிலையங்களுக்குமான கட்டளைப் பொறுப்புநிலையை மெண்டிஸ் வகித்திருந்தார். இவர் இந்தப் பதவியை வகித்த காலப்பகுதியில் பல்வேறு பயங்கரமான மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன’ என காயர் சுட்டிக்காட்டினார்.

சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழுவால் மெண்டிசிடம் பல்வேறு வினாக்கள் வினவப்பட்ட போதிலும், அவர் கூட்டத்தொடரில் இருந்த போது ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என காயர் மேலும் குறிப்பிட்டார்.

ஆங்கில மூலம்  –  NICK CUMMING-BRUCE
வழிமூலம்          –  New York Times
மொழியாக்கம்   – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *