மேலும்

பண நெருக்கடி – விதிமுறையை தளர்த்துமாறு இந்திய அரசிடம் வெளிநாட்டு தூதரகங்கள் கோரிக்கை

india-currencyவெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பணத்தைப் பெறுவதற்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தூதரகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவில் 1000 ரூபா, 500 ரூபா நாணயத் தாள்கள் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதன் படி, தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு அதிகபட்சம் 2500 ரூபா மாத்திரமே மீளப் பெற முடிவதுடன், வெளிநாட்டவர்கள் வாரம் ஒன்றுக்கு கடவுச்சீட்டை காண்பித்து 5000 ரூபாவுக்கு இணையான வெளிநாட்டு நாணயத் தாள்களை மாத்திரமே, மாற்றிக் கொள்ள முடியும்.

இதனால்,  வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

நாணயத்தாள்கள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர், பணமாற்றும் நடைமுறைகளில் காணப்படும் சிக்கல்களினால் தாம் தவிப்பதாக புத்தகாய உள்ளிட்ட இடங்களில் இருந்து எமது நாட்டவர்கள் பலரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன.

இதுதொடர்பாக கவனிக்கும்படி இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எம்மால் முடிந்தளவுக்கு எமது நாட்டவர்களுக்கு உதவ முயற்சித்தோம்” என்று புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுரக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறிலங்காவுக்கு ஆண்டு தோறும் 3 இலட்சம் இலங்கையர்கள் சுற்றுலா வருகின்றனர். இவர்களில் 2 இலட்சம் பேர் யாத்திரிகர்களாவர்.

சிறிலங்காவை விட, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தும், பௌத்த ஆலயங்களுக்கு யாத்திரிகர்கள் அதிகளவில் வருகின்றனர்.

நாணயத்தாள்கள் பெறுமதியற்றதாக்கப்பட்டதால், வெளிநாட்டு பயணிகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக, இந்தியாவில் உள்ள 157 வெளிநாட்டுத் தூதரகப் பணியகங்களின் சார்பில் கருத்து வெளியிட்ட பிராங் ஹான்ஸ் டானென்பேர்க் காஸ்ட்லானொஸ் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் கவனத்துக்கு தாம் இதனைக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

தாஜ்மகால் போன்ற, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவியும் முக்கியமான இடங்களில் கடன் அட்டையை ஏற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தாம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மையங்களிலும், விடுதிகளிலும் உள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரங்களில், சுற்றுலாப் பயணிகள், இலகுவாக பணத்தை எடுக்கும் வசதிகளை செய்யப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளதாகவும், பிராங் ஹான்ஸ் டானென்பேர்க் காஸ்ட்லானொஸ் தெரிவித்துள்ளார்.

இவர், டொமினிக்கன் குடியரசின் இந்தியாவுக்கான தூதுவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *