மேலும்

குற்றச்செயல்களுக்கு கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் – சரத் பொன்சேகா

sarath fonsekaமோசடியில் ஈடுபட்டார்கள் என்பதற்காக தம்மால் துரத்தப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று  பாதுகாப்பு அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியமையாலேயே நாடு என்ற அங்கீகாரம் எமக்கு அனைத்துலக ரீதியில் கிடைத்துள்ளது.

பாதுகாப்பு இன்றி நாடொன்றில் பொருளாதார முன்னேற்றமோ அல்லது நாட்டை முன்னேற்றுவதற்கான எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது.

நாட்டின் பாதுகாப்புக்கு உள்ளக ரீதியாகவும், அனைத்துலக ரீதியாகவும் அச்சுறுத்தல் ஏற்படலாம். உள்ளக அச்சுறுத்தல் தொடர்பில் எமக்கு அனுபவங்கள் உள்ளன. இவற்றை தடுத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கும், காவல்துறைக்கும் உள்ளது.

நான் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற போது, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் மோசடியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் இருந்தனர்.

எனினும், அவர்களை ஒதுக்கி விட்டு, திறமைவாய்ந்த அதிகாரிகளை உரிய பதவிகளுக்கு நியமித்து , இராணுவப் புலனாய்வுப் பிரிவு மீளமைக்கப்பட்டது.

மோசடிகள் தொடர்பில் துரத்தி விடப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கோத்தாபயவுடன் இணைந்து செயற்பட்டனர். அவர்கள் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டனர்.

அனைத்துலக சட்டங்கள் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமையவே நான் போரை முன்னெடுத்தேன். இராணுவத்தினருக்கு எதிரான சவால்களுக்குப் பொறுப்புக்கூற நான் தயாராகவே இருக்கின்றேன்.

எனினும், கோத்தாபயவின் எண்ணங்களை நிறைவேற்றச் சென்று சட்டத்தை மீறிச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பாக என்னால் பொறுப்புக்கூற முடியாது.

அதற்கான பொறுப்பை கோத்தாபய ராஜபக்‌சவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவ முகாம்கள் பேணப்பட வேண்டும். அதேவேளை, இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.

காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க சிறிலங்கா இராணுவத்தினர் முன்வர வேண்டும்.

இராணுவத்தின் பொறுப்புக்கள் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.

போரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய இராணுவம் இப்போது நல்லிணக்க முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு உதவ வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *