மேலும்

சிசிர மென்டிசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

dig-sisira-mendisசித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தொடருக்கான சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறித்து, ஐ.நா நிபுணர் குழு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தொடர் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்த மீளாய்வு இடம்பெற்ற போது, சிறிலங்கா தரப்பில் சட்டமா அதிபர் தலைமையிலான குழு பங்கேற்றது. அந்தக் குழுவில், பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சிசிர மென்டிஸ் தலைவராக இருந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினால், சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டிருந்த பிரிவுக்குத் தலைமைதாங்கிய- குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டியவர், சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக, ஐ.நா நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையில் கூறியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட காலத்தில், பிரதி காவல்துறை மாஅதிபர் சிசிர மென்டிசின் பங்கு தொடர்பான விரிவான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் ஐ.நா குழு கோரியுள்ளது.

அத்துடன் சிசிர மென்டிசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *