மேலும்

கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழரின் தனித்துவத்தை வலியுறுத்தினார் விக்னேஸ்வரன்

stephen-dion-cm (1)சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வட மாகாண ஆளுனரை அவரது செயலகத்திலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்திலும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

“சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமையை அறிந்து கொள்ளவே இங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் உள்ள பிரச்சினை போன்று தமது நாடும் பிரெஞ்ச் மொழி பேசும் மக்களும் பிரிவினைவாதப் பிரச்சினையை எதிர் கொண்டது. பின்னர் அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு தற்போது இரு தரப்பினரும் பிரச்சினையின்றி சுமூகமாக உள்ளனர். அது போன்று நம் நாட்டில் அவ்வாறு ஒரு முன்னெடுப்பை செய்வதில் என்ன பிரச்சினை நிலவுகிறது என என்னிடம் கனேடிய வெளிவிவகார அமைச்சர் வினவினார்.

stephen-dion-cm (1)

stephen-dion-cm (2)

நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலைமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக சிறிலங்கா மாறியது. அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் கூறினேன்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாசாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்படையில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

நீங்கள் தமிழன் என்பதிலும், இலங்கையன் என கூறுவதிலும் பெருமைப்படுகிறீர்களா? என வித்தியாசமான ஒரு கேள்வியை என்னிடம் அவர் கேட்டிருந்தார்.

அதற்கு ‘அவ்வாறு நான், நாம் இருப்பதற்கு எமது தனித்துவம் எமக்கு வழங்கப்பட வேண்டும், வடபகுதிகளில் தமிழினத்தை விட அயலினத்தின் குடியேற்றம் எமக்கு வேண்டாம் அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என நான் அவரிடம் கூறினேன். இந்த நாட்டில் இன ஒருமைப்பாடு ஏற்படுத்துவதற்கு கனடா கண்ணும் கருத்துமாக உள்ளது. கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *