மேலும்

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை

anuradhapura-courtஇருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள், திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில், சிறிலங்கா இராணுவத்தினரால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தெகிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பின்னர் போர்ச்சூழலைக் காரணம் காட்டி, இந்த வழக்கு சந்தேக நபர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் மரணமாகிவிட்டனர்.

anuradhapura-court

ஏனையவர்களான கோப்ரல்கள், நிசாந்த, அஜித் சிசிரகுமார, கபில தர்சன, அபேசிங்க, உபசேன, அபேரத்ன ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதமே, அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீளத் தொடங்கப்பட்டது.

இதன்போது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் சாட்சியங்களை அளித்ததுடன், சந்தேக நபர்களை அடையாளம்காட்டியும் இருந்தனர்.

எனினும், சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இறுதிவாதத்தின் போது,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசசட்டவாளர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *