மேலும்

கெரவலப்பிட்டியவில் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கிறது இந்தியா

LNG-terminalசிறிலங்காவின் மேல் மாகாணத்தில் கெரவலபிட்டிய பகுதியில், 500 மெகாவாட் திறன்கொண்ட, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை இந்தியா அமைக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்டிருந்தார்.

இதையடுத்து, அதுபற்றி கலந்துரையாடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மேதாடி தனது அதிகாரிகளைப் பணித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்திய-சிறிலங்கா கூட்டு பணிக்குழு பல்வேறு  தெரிவுகள் தொடர்பாக ஆராய்ந்தது. இந்தநிலையிலேயே கெரவலப்பிட்டியவில், 500 மெகாவாட் திறன்கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை அமைக்கும் யோசனையை சிறிலங்கா தரப்பு முன்வைத்துள்ளது.

கொழும்பை அடுத்த கெரவலப்பிட்டியவில், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 300 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் ஒன்றை அமைத்திருந்தது.

திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதற்கு சம்பூரை விட கெரவலப்பிட்டிய மிகச் சிறந்த இடமாக கருதப்படுகிறது. மேற்கு கரையோரப்பகுதியில் அமைந்திருப்பதால், திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியின் முக்கிய கேந்திரமான கட்டாருக்கு இது மிக அண்மையில் உள்ளது.

குளிர்மைப்படுத்துவதற்கான கடல் நீரைப் பெறுவதற்கு வசதியாக, சம்பூரும் கடலோரப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

அனைத்துலக சந்தையில் திரவ இயற்கை எரிவாயு மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால், அனல் மின் திட்டங்களை விட, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டங்களுக்கு செலவு குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கெரவலப்பிட்டிய திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம், புதிய இந்திய-சிறிலங்கா அமைப்பினால் இயக்கப்படுமா அல்லது ஏற்கனவே சம்பூரில் மின் நிலையத்தை அமைப்பதற்காக கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட  திருகோணமலை மின் நிறுவனம் மூலம் இயக்கப்படுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *