மேலும்

பொருளாதார மத்திய நிலைய கருத்து வாக்கெடுப்பு – வெற்றிபெற்றது ஓமந்தை

omanthaiவடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்குச் சாதகமாகவே, கூட்டமைப்பின் அதிகளவு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு வெளியிட்டார்.

அதேவேளை, கூட்டமைப்பின் மற்றொரு தொகுதி நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், அதனை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனால் கடும் இழுபறி ஏற்பட்டதுடன், இந்த திட்டம் மதவாச்சிக்கு மாற்றப்படும் ஆபத்தும் ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடத்திய பேச்சுக்களின் முடிவில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வாக்கெடுப்பை நடத்தி முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, முதலமைச்சர் செயலகத்தினால், கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தறியும் சீட்டு அனுப்பப்பட்டது.

இன்று இந்த வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டபோது, பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு ஆதரவாக, 21 உறுப்பினர்களும், தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு ஆதரவாக 5 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். ஏனைய 13 உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, வடக்கு பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதில் இருந்து வந்த இழுபறிக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *