மேலும்

சிறிலங்கா விமானப்படையிடம் இருந்து கைமாறியது மட்டக்களப்பு விமான நிலையம்

Batticaloa Airportசிறிலங்கா விமானப்படையின் வசம் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகவே, சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த மே 31ஆம் நாள் வெளியிடப்பட்டதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்தை  அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Batticaloa Airport

மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை, சிறிலங்கா விமானப்படையின் உதவியுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால், 1400 மில்லியன் ரூபா செலவில் புரமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து வரும் ஜனவரி மாதம் தொடக்கம்  விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க, மத்தல உள்ளிட்ட சிறிலங்காவில் உள்ள 16 விமான நிலையங்களில், 4 விமான நிலையங்கள் மாத்திரமே, தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஏனைய 12 விமான நிலையங்களும், சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இயங்குவதாகவும்,  சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்தார்.

அதேவேளை, மட்டக்களப்பு விமான நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் சந்திம அல்விஸ், இந்த விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், விமான நிலைய சுற்றாடலின் பாதுகாப்பு சிறிலங்கா விமானப்படை வசமே இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *