மேலும்

ராஜ் ராஜரத்தினத்துக்கு நிபுணத்துவ உதவிகளையே வழங்கினேன் – சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர்

Dr. Indrajit Coomaraswamyஉள்ளக பங்கு வர்த்தக மோசடிக் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரத்தினத்துக்கு தாம் நிபுணத்துவ சேவைகளை மாத்திரமே வழங்கியதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் நேற்று முதல் முறையாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஒரு பொருளியலாளர் என்ற வகையில் அவருக்கு சில குறிப்பிட்ட நிபுணத்துவ சேவைகளை மாத்திரம் வழங்கினேன். ஆய்வு அறிக்கைகளை வழங்குவது மட்டுமே எனது பணியாக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் ராஜரத்தினம் எனது நண்பர். நான் லண்டனில் இருந்த போது, அவருக்கு நுண் பொருளியல் ஆய்வை மேற்கொண்டேன். அவருக்கு எனது பின்புலம் தெரியும்.  எனது உதவியைக் கோரினார்.

10,11 மாதங்கள் அவருக்கான பணியாற்றினேன். அதற்குப் பின்னர் அவர் குற்றம்சாட்டப்பட்டார்.

ஒரு நண்பனாகவே அவரை எனக்குத் தெரியும். அவர் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்கினார்.

சாதகமமான பல சிந்தனைகளை அவர் கொண்டிருந்தார். பெருமளவில் தொண்டுப் பணிகளை அற்றினார். எனக்குத் தெரிந்த ராஜ் ராஜரத்தினம் அவர் தான்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினம் புலிகளுடன் தொடர்புடையவர் என்றும், அவருடன் தொடர்பு வைத்திருந்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை மத்திய வங்கி ஆளுனராக நியமித்திருப்பது தவறு என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே ராஜ் ராஜரத்தினத்துக்கும் தனக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *