மேலும்

சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில்

sri lanka -china signசிறிலங்காவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாத காலப்பகுதியில்,  வெளிநாட்டு அரசாங்கங்கள், மற்றும் முகவர் அமைப்புகளிடம் இருந்து 727.5 மில்லியன் டொலர்  பெறுமதியான 8 கடன் உடன்பாடுகள் மற்றும் 127.9 மில்லியன் டொலர் பெறுமதியான 9 கொடை உடன்பாடுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் அரையாண்டு நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன எக்சிம் வங்கியின் முதலீட்டில் 360.3 மில்லியன் டொலர் செலவில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம்-2, அக்ரிகோல் பிரான்ஸ் கடனுதவியில் 123.7 மில்லியன் யூரோ செலவிலான பெரும்பாக மாத்தளை நீர் விநியோகத் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதலீட்டில், 100 மில்லியன் டொலர் செலவிலான சிறிய நடுத்தர தொழில்துறைக்கான கடன் திட்டம், என்பன இவற்றில் பெரிய திட்டங்களாகும்.

இதைவிட, கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் இரண்டாவது நிலைக்காக, ஜப்பானிய அரசாங்கம், இந்தக் காலப்பகுதியில் 402.7 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.

அதேவேளை இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில், பல்வேறு இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளர்களிடம் இருந்து, 311.7 மில்லியன் டொலர் உதவிக்கான வாக்குறுதிகள் கிடைத்துள்ளன. இதில், 301.9 மில்லியன் டொலர் கடனுதவியாகும். எஞ்சிய 9.95மில்லியன் டொலர், கொடையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *