மேலும்

நவீனமயப்படுத்தப்படவுள்ள சிறிலங்காவின் விவசாயத்துறை – உலக வங்கி ஒப்புதல்

World-Bankசிறிலங்காவின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் அனைத்துலக அபிவிருத்தி அமைப்பால் (International Development Association- (IDA) சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ள 125 மில்லியன் டொலர் கடனுதவிக்கு உலகவங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இத்திட்டத்தைச் செயற்படுத்துவதன் மூலம் சிறிலங்கா தனது நாட்டின் விவசாயத் துறையை மேலும் வினைத்திறனுடனும் கவர்ச்சிகரமானதாகவும், நுகர்வோரின் தேவைகளை மேலும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் சூழலில் நிலைத்து நிற்கத்தக்க வகையிலும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க வகையிலும் முன்னேற்ற முடியும்.

இத்திட்டமானது ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பங்களிப்புடன் அமுல்படுத்தப்படும்.

சிறிலங்காவின் விவசாயத் துறையானது மூலோபாய முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர் தீட்டப்பட்ட பல்வேறு விவசாய மூலோபாயங்கள் மூலம் நெல் உற்பத்தி தன்னிறைவை அடைந்துள்ளது. இதேவேளையில், கடந்த பத்து ஆண்டுகளில் 30 சதவீதமானவர்களே தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபடுகின்ற அதேவேளையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பானது தொடர்ந்தும் பத்து சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

இந்த நிலையானது சிறிலங்காவின் விவசாயத் துறை அபிவிருத்தி எதிர்காலத்தில் எத்திசை நோக்கிச் செல்லப் போகின்றது என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆகவே சிறிலங்கா தனது எதிர்கால விவசாய மூலோபாயக் கோட்பாட்டை மாற்றியமைக்கும் போது கிராம மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய முறைமையைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

‘சிறிலங்காவின் உயர் தர சமூக, கலாசார மற்றும் பொருளாதார வரலாறானது விவசாயத் துறையிலும் இதன் நெல் அறுவடைப் பாரம்பரியத்திலும் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆகவே சிறிலங்காவின் விவசாய உற்பத்தியை உயர் வலுவுடையதாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்யக் கூடிய முறைமையும் உருவாக்கப்பட வேண்டும்’ என சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி பிரான்கொய்ஸ் குளோற்றஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘பிறிதொரு விவசாய முறைமைக்கு மாறும் போது வருமான வளர்ச்சி, ஏழ்மைக் குறைப்பு, சிறந்த போசாக்கு வெளிப்பாடுகள் போன்ற முக்கிய மாற்றங்கள் ஏற்படும். இந்த அணுகுமுறையானது உலக வங்கிக் குழுவின் இரட்டை இலக்குகளை நேரடியாக அடைய உதவுகின்றது’ என உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்தார்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டவுள்ள இத்திட்டமானது வலுமிக்க விவசாயத் தொடர் அபிவிருத்திக்கு ஆதரவாக இருக்கும். இதன்மூலம் வர்த்தக மற்றும் ஏற்றுமதி சார் விவசாய முறைமை குறிப்பாக, பெறுமதி மிக்க பழங்கள் மற்றும் மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.

நவீன விவசாய முறைமை ஊடாக விவசாய உற்பத்தித் திறன் மற்றும் தற்போதைய விவசாய முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இதன்மூலம் விவசாய அமைப்புக்கள், விவசாய மற்றும் அதற்கான வர்த்தகப் பங்களிப்புக்களை உருவாக்குவதற்கான வழி பிறக்கும். இது எதிர்காலத்தில் அரசாங்கமானது விவசாயத்துறையை உறுதியுடன் கட்டியெழுப்புவதற்கான விவசாயக் கோட்பாட்டு அபிவிருத்திக்கு ஆதரவாக இருக்கும்.

‘இத்திட்டமானது சிறிய ரக விவசாயிகள் நவீன விவசாயத் தொடருக்குள் உள்வாங்கப்படுவதற்கும், கவர்ச்சிகரமான தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், குறிப்பாக இளையோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புக்களுக்கும் உறுதுணையாக இருக்கும்’ என நிகழ்ச்சித் திட்ட இயக்குனரும் உலக வங்கியின் செயற்குழுத் தலைவருமான உல்றிச் செச்மிற் தெரிவித்தார்.

‘புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் புதிய தொழினுட்பம் போன்றன விவசாயத் துறையில் பொருளாதார வினைத்திறனை உருவாக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கை அழிவுகள் மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்நோக்குவதற்கும் உதவும்’ என உலக வங்கியின் நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்குள் 30,000 சிறிய வகை விவசாயிகள் பயனாளிகளாக உள்வாங்கப்படுவர். இப்பயனாளிகள் தமது விவசாயத்தை மேம்படுத்துவதற்கான புதிய தொழினுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வார்கள். இதற்கும் அப்பால் விவசாயிகள் சங்கங்கங்களை உருவாக்கி அதன் மூலம் மேலும் 20,000 விவசாயிகள் தமக்கான தொழினுட்ப மற்றும் வர்த்தகப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கப்படும். இது கிராமிய மட்டங்களில் விவசாயிகள் தமது தொழிலை விரிவுபடுத்தி தமக்கான வருவாயை அதிகரிப்பதற்கு உதவும்.

வழிமூலம்        – worldbank.org
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *