மேலும்

தேஜஸ் போர் விமானங்களை நட்பு நாடுகளுக்கு விற்கத் தயார்- இந்திய பாதுகாப்பு அமைச்சர்

Tejas jetஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை நட்புநாடுகளுக்கு விற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்கல் நிறுவனத்தினால் உள்ளூர் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜஸ் போர் விமானங்கள் நேற்று முன்தினம், இந்திய விமானப்படையில் முதல் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டன.

பெங்களூரில் நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

“2025ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை, 120 தேஜஸ் போர் விமானங்களைக் கொண்டிருக்கும். நான்காவது தலைமுறைப் போர் விமானமான தேஜஸ், உயர் போரிடும் திறன் கொண்டதாக இருக்கும்.

இதில், கண்ணாடியிலான விமான அறை, செய்மதி உதவியுடன் கூடிய வழிகாட்டல் முறை, கணினி மயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையிலான தாக்குதல் முறை, வானில் இருந்து வானுக்கு செலுத்தும் ஏவுகணைகள், வானில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் ஆயுதங்கள், வழிகாட்டல் குண்டுத் தொகுதிகள், வானத்திலேயே எரிபொருள் நிரப்பும் வசதிகளையும்  இந்த தேஜஸ் போர் விமானங்கள் கொண்டிருக்கும்.

இந்த தேஜஸ் போர் விமானங்கள் நட்பு நாடுகளுக்கு விற்கப்படுவதற்கும் தயார் நிலையில் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேஜஸ் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்கனவே விருப்பம் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படையில், இந்த ஆண்டில் ஆறு தேஜஸ் போர் விமானங்களும், அடுத்த ஆண்டில் எட்டு தேஜஸ் போர் விமானங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

தேஜஸ் போர் விமான ஸ்குவாட்ரன், அடுத்த இரண்டு ஆண்டுகள், பெங்களூருவைத் தளமாக கொண்டு இயங்கும். அதன் பின்னர், தமிழ்நாட்டின் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு மாற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *