மேலும்

சலாவ ஆயுதக்கிடங்கில் இன்னமும் தொடரும் வெடிப்புகள்- பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்

kosgama-blastசிறிலங்கா இராணுவத்தின் சலாவ முகாம் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னமும் சிறியளவிலான வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமாலை ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து வானளாவ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த தீ இன்று அதிகாலை ஒரு மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறியிருந்தது.

எனினும், அதிகாலை 1.30 மணியளவிலும் பாரிய குண்டுச்சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், 10 மணிநேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருவதாக இன்று காலை ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும், சிறியளவிலான வெடிப்புகள் இடம்பெறுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

ஆயுதக் கிடங்கில் இருக்கும் சிறியளவிலான வெடிபொருட்களே வெடிப்பதாகவும், அதனால் அபாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீ பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும், அந்தப் பகுதி எங்கும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்றைய வெடிப்புச் சம்பவங்களால், முகாமைச் சுற்றியுள்ள பெரும் பிரதேசம் எங்கும், குண்டுச் சிதறல்களாக காட்சியளிக்கின்றன.

நேற்று மாலை இடம்பெற்ற வெடிவிபத்தை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். இவர்களில் சலாவ முகாமுக்கு 1 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள மக்களை வீடுகளுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அடையாளம் தெரியாத பொருட்களை கையால் தொட வேண்டாம் என்றும், வெடிபொருட்கள் சிதறிக் கிடக்கலாம் என்றும் சிறிலங்கா இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

ஆபத்தான நச்சுப்பொருட்கள் கலந்திருக்கலாம் என்பதால், அந்தப்பகுதி மக்கள் குடிநீர் கிணறுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இன்று காலை முதல் சிறிலங்கா விமானப்படையின் பெல் உலங்குவானூர்தி மூலம், ஆயுதக் கிடங்குப் பிரதேசம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய வெடிவிபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்ட அதேவேளை, 47 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 37 பேர் சுவாசப் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இன்று ஆயுதக் கிடங்குப் பகுதியில் தேடுதல்களை மேற்கொள்ளும் போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *