மேலும்

சொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை?

deepamஏழு ஆண்டுகளுக்கு முன், உலகத் தமிழரெல்லாம், ஒன்றுகூடி கண்ணீர்விட்ட நாள் இது. உலகமே, தமிழரின் உணர்வுகளை நசித்துப் பார்த்த நாள் இது.விடுதலைகோரியவர்கள் என்பதற்காக வஞ்சகமாய் வீழ்த்தப்பட்ட நாள்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளையும், தமிழின விடுதலைக்காய் உயிர்கொடுத்த உத்தமர்களையும், இந்நாளில் தலைவணங்குகிறோம். இவர்களுக்காய் ஒளியேற்றும் தீபத்தின் ஒளியில், தமிழரின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பயணம் தொடரட்டும்.

சொற்களில்தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை?

சிறுகல் கொண்டு

மலையொத்த கோலியாத்தை

சின்னஞ்சிறு டேவிட் வீழ்த்தும்

சொற்களில் உறைந்த கதை

கேட்டிருந்தோம்.

 

ஆனால்

காளையின் கொம்பென்ற

இரட்டைக் கோபுர

இடிபாட்டின் தூசுக்குள்

உருப்பெற்றெழுந்த

அந்த ஒற்றைச் சொல்லை

மேற்கோள் குறியிட்டே

உச்சரித்த வஞ்சகச் சொல்லை

தெரிந்திருந்தோமா?

 

விடுதலை அவாவும்

குரல்வளை அறுபடவும்

விடுதலைப் பாடலை

சேர்ந்திசைப்போர்க்கு

என்றென்றைக்குமான

பாடம் புகட்டவும்

தேர்ந்தெடுக்கபட்டோம் நாம்

அறிந்திருந்தோமா?

 

விடுதலைக் கனியின்

மரபணு விதைக்குள்

வீரியம் கலந்த

ஓர்மமும் கொடூரமும்

சமன்பாடற்று

ஓங்கியே வளர்ந்ததால்

அவர்கள் உச்சரித்த

ஒற்றைச் சொல்லின்

சாயல் படிந்ததை

தவிர்த்திருந்தோமா?

 

நானா தேசங்களின்

கண்களை குருடாக்கி

காதுகளை செவிடாக்கி

வாய்களை ஊமையாக்கிய

அந்த ஒற்றை சொல்லின்

தாண்டவ ஆட்டத்தில்

முள்ளி வாய்க்கால்

மூச்சடங்கிப் போகுமென

முன்மொழிந்திருந்தோமா?

 

கூர் மிகுந்திருந்த

அந்த ஒற்றைச் சொல்லே

கொத்தாய் குலைகுலையாய்

உயிர்களை அறுத்தெடுக்க

கையறு நிலை கொண்டே

நாமும் சாட்சியாய் இருந்ததை

பொய்யென்று உரைப்போமா?

புனைவென்று உரைப்போமா?

 

எவ்வாறாய் உரைத்தாலும்

பயம் மிகுந்ததனால்

பயங்கரம் கொண்டவர்களை

அவ்வொற்றைச் சொல்லிணைக்க

கோலியாத் ஆனார்கள்

ஊனூற்றி உயிரூற்றி

கார்த்திகை பூக்களால்

இழைத்த சிறு கூட்டை

சின்னஞ்சிறு டேவிடை

வீழ்த்தினார் மெய்தான்..

 

ஒருத்துவ தமிழராய்

ஒடுங்கியோர் தோழணைவாய்

மீண்டுமொரு மிடுக்காய்

சொற்களை உடைத்து

நாமெழா வரைக்கும்

தலைமுறை தாண்டியும்

சொற்களில்தான் உறையுமோ

முள்ளிவாய்க்கால்

வதையின் கதை.

– கி.பி.அரவிந்தன்.( 2010)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *