மேலும்

வடக்கில் சிறிலங்கா படையினர் புதிதாக காணிகளை சுவீகரிக்கவில்லையாம்

Karunasena Hettiarachchiவடக்கில் சிறிலங்கா படையினரால் புதிதாக எந்த காணிகளும் சுவீகரிக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிறிலங்கா படையினருக்காக காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீவகத்தில் சிறிலங்கா கடற்படையினருக்கு காணிகளை சுவீகரிக்க அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

அதேவேளை, ஆனைக்கோட்டை சூழாவடியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு, காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் அளவீட்டு நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த நிலையில், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதையடுத்து அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினருக்கு காணிகள் சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி, யாழ். மாவட்டச் செயலரிடம் மனுவொன்றைக் கொடுத்த, கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளரின் பணியகத்தை மூடி போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி,

“வடக்கில் புதிதாக இராணுவத்தினருக்கு காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. பாதுகாப்புத் தேவைக்காக ஏற்கனவே, திட்டமிடப்பட்டிருந்த இடங்களையே சிறிலங்கா இராணுவத்தினர் சுவீகரித்து வருகின்றனர்.

தேசிய பாதுகாப்புக்காக ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. தற்போது அதுபோன்ற நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக எந்த நிலங்களும் சுவீகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *