மேலும்

சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா? – கலாநிதி. கோ. அமிர்தலிங்கம்

sampoorஉலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா, ஜேர்மன், சீனா போன்ற நாடுகள் நிலக்கரி அனல் மின் நிலையங்களை படிப்படியாக மூடி வருகின்றன. அண்மையில் மெக்சிக்கோ அரசாங்கம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 1720 மெகாவாட் மின்சாரத்தினை காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பெறுவதற்கான முதலாவது முதலீட்டு வாய்ப்பினை தனியார் துறைக்கு வழங்கியுள்ளதுடன் இதேவகையான மற்றுமொரு முதலீட்டு வாய்ப்பு  இம்மாதத்தில் தனியார் துறைக்கு வழங்கப்படவிருகின்றது.

சம்பூரில் நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தினை உருவாக்க முனையும் இந்தியா கூட அண்மையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடமிருந்து கடனாகப் பெற்று சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் திட்டத்தில் முதலீடு செய்யவுள்ளதுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பூங்காக்களை உருவாக்கத் திட்டமிடுகின்றது.

ஆனால் நிலக்கரி மூலம் 500 மெகாவாட்  மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய சம்பூர்  அனல் மின்சார நிலையத்தினை சூழல் மீது மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டிய திருகோணமலையில் உருவாக்குவதற்கு இலங்கை மீது இந்தியா தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. இது இந்தியாவின் இரட்டை வேடத்தினை நன்கு வெளிப்படுத்துகின்றது.

வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போது இந்தியா நிலக்கரி மீது இறக்குமதி தீர்வையினை விதிக்கும் போது,  இலங்கை நிலக்கரி இறக்குமதிக்கு முழுமையான தீர்வை விலக்களிப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் நிலக்கரி மூலமான சூழல் தாக்கத்தினை இந்தியா புரிந்து கொண்டுள்ள அளவுக்கு இலங்கை புரிந்து கொள்வில்லை என்பது தெளிவாகின்றது.

நுரைச்சோலையில் நடப்பதென்ன?

நுரைச்சோலை அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி மக்கள் எதிப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்களின் எதிப்பினையும் மீறி அனல் மின்நிலையம் கட்டப்பட்ட போது அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், இலவச மின்சார விநியோகம், பாடசாலைக்கு கட்டடம் அமைத்துத் தருதல், வீதி அமைத்துத் தருதல், மீன்பிடிக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் திட்டங்களை வகுத்தல் போன்ற பல உத்தரவாதங்கள் நுரைச்சோலை பகுதி மக்களுக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் இவை எவையுமே இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுரைச்சோலை அனல் மின்நிலையம் தொடர்பான சூழல் தாக்க பகுப்பாய்வு அறிக்கையில் நிலக்கரி மற்றும் சாம்பல் கிராமங்களை நோக்கி பரவாமல் தடுப்பதற்கு பெரிய மரங்கள் நடப்படவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல வருடங்கள் கடந்தும் மரங்கள் எவையும் இன்றுவரை நடப்படவில்லை. காற்று கடலிலிருந்து தரைப்பகுதியினை நோக்கி வீசும் போது நிலக்கரியும் சாம்பலும் நிலப்பகுதியினை நோக்கி விசிறப்படுவதால் மக்களின் வாழ்வாதாரமும் ஆரோக்கியமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுமட்டுமன்றி நிலக்கரியினை எரிக்கும் போது உருவாகும் சாம்பல் சீமெந்து உற்பத்தி ஆலைகளுக்கு விற்கப்படும் என்று சூழல் தாக்க பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து உருவாகும்  சாம்பல் சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறி சீமெந்து ஆலைகள் சாம்பலினை வாங்க மறுத்து விட்டனவாம். இதனாலேயே சாம்பல் அனல் மின் நிலையத்திற்கு அருகேயுள்ள பிரதேசத்தில் கொட்டப்படுகின்றது.

மேலும் சல்பர் வாயு, நைதரசன் வாயு, தூசுப் படிவுகள் போன்றவற்றின் தாக்கத்தினை கண்காணிப்பதற்காக கற்பிட்டியில் ஒரு கண்காணிப்பு நிலையத்தினையும் புத்தளம் நகரத்தினை அண்டிய பகுதிகளில் இரண்டு  கண்காணிப்பு நிலையங்களையும் அமைக்க வேண்டும் எனவும் சூழல் தாக்க பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அவ்வாறான நிலையங்கள் எதுவும் இன்றுவரை அமைக்கப்படவில்லை என்பதனை நம்பகமான தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இதன் மூலம் சூழல் தாக்க பகுப்பாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது நிரூபணமாகின்றது.

சம்பூர் நிலக்கரி அனல் மின்நிலையம் ஏன் பேரழிவினை ஏற்படுத்தப் போகின்றது?

சம்பூர் நிலக்கரி அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பான திட்டம் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரியதாகவே காணப்படுகின்றது. இத்திட்டம் தொடர்பான சூழல் பாதிப்பு பகுப்பாய்வு, செலவு நலன் பகுப்பாய்வு மற்றும் சமூகப் பாதிப்பு பகுப்பாய்வு என்பன சம்பூர் மக்கள் இடம் பெயர்ந்து மட்டக்களப்பிலிருந்த முகாம்களில் வாழ்ந்த போதே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களிடம் பரந்துபட்ட அளவில் எவ்விதமான கருத்துக்களும் கேட்கப்படவில்லை.

இத்திட்டம் தொடர்பான சூழல் பாதிப்பு பகுப்பாய்வில் சம்பூரில் ஒரு கோயிலும் இரண்டு கடற்படை முகாம்களும் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்வதாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 25.03.2016 அன்று சம்பூரில் முழுமையான மீள்குடியேற்றம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு மக்கள் இப்போதுதான் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள். சூழல் பாதிப்பு பகுப்பாய்வில்குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஒன்று சம்பூர் மகாவித்தியாலயத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அம்முகாம் அகற்றப்பட்டு 28.03.2016 தொடக்கம் சம்பூர் மகாவித்தியாலயம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலைமையில் சம்பூர் நிலக்கரி அனல் மின்நிலையம் தொடர்பாக முன்பு மேற்கொள்ளப்பட்ட சூழல் பாதிப்பு பகுப்பாய்வு, செலவு நலன் பகுப்பாய்வு மற்றும் சமூகப் பாதிப்பு பகுப்பாய்வு என்பவை அடிப்படையில் தவறாகப் போய்விட்டன. ஆகவே இவ்வாய்வுகளை மீண்டும் செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் அதிகாரிகளினதும் சட்டரீதியான கடமையாகும்.

நுரைச்சோலை அனல்மின்நிலையமும் நிலக்கரி கப்பல்களிலிருந்து இறக்கப்படும் இறங்கு துறையும் கடற்கரை ஓரமாக மிக அருகருகே அமைந்துள்ளன. ஆனால் சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் போது கடற்கரைச் சேனைக்கும் சம்பூருக்கும் இடையே அமையப் போகும் இறங்குதுறையிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வயற் பிரதேசங்களிலேயே சம்பூர் அனல் மின்நிலையம் அமையப்போகின்றது. நிலக்கரியினை கடற்கரையோரத்திலிருந்து மக்கள் வாழும் பகுதிகளூடாகக் கொண்டு செல்லும் போது பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கப் போகின்றது.

சம்பூர் மற்றும் மூதூர்ப் பிரதேசங்களில் ஒக்டோபர் மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியானது நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியியே கடலிலிருந்து காற்று தரைப்பகுதியினை நோக்கி வீசுகின்றது.    இவ்வாறு காற்று நிலப்பகுதியினை நோக்கி வீசும் போது சாம்பலும் நிலக்கரித் துகள்களும் நுரைச் சோலையில் நடப்பது போல் காற்றினால் அள்ளுண்டு செல்லப்படுமானால்சம்பூர், சேனையூர், கட்டைபறிச்சான், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், கிளிவெட்டி போன்ற பிரதேசங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்படப் போகின்றன.

நுரைச்சோலையில் நடப்பது போன்று கப்பல்களிலிருந்து இறக்கப்படும் போது நிலக்கரி கடலில் சிந்தப்படுமானால்  செழிப்பான கொட்டியாரக் குடாவின் மீன்பிடி பாதிக்கப்படப் போகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகப் போகின்றது.

அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீர் திருகோணமலைத் துறைமுக வாயிலில் அமைந்துள்ள செல் வளைகுடாப் பகுதியில் வெளியேற்றப்படப் போவதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவித்தன. இப்பகுதியில் இறால், நண்டு, கணவாய் போன்ற கடலுயிரினங்கள் அபரிமிதமாக் காணப்படுகின்றன. இதைச்சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டிய பின்னர் சம்பூருக்குச் சென்ற சக்தி மற்றும் மீளுருவாக்கம் செய்யக்கூடிய சக்தி வள அமைச்சர் சியம்பலாப்பிட்டிய அவர்கள் அனல்மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும சுடுநீர் கொக்கட்டிப் பிரதேசத்தினூடாக குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலுக்குள் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.

அவர் அடையாளம் கண்டுள்ள பிரதேசம் உலகில் மிகவும் கவனிப்பாக பேணப்படும் பவளப் பாறைகள் நிறைந்த இடமாகும். எவ்வித சூழல் பாதிப்பு பற்றிய பகுப்பாய்வுமின்றி இவ்விடம் திடீரென எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழரசுக் கட்சித் தலைமையின் நிலைப்பாடும் விளக்கமும் சரியானதா?

சம்பூர் நிலக்கரி அனல் மின்நிலையம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே  திருவாளர் சம்பந்தன் அவர்கள் தவறான நிலைப்பாட்டிலேயே உள்ளார். சம்பூர் மக்கள் குடியேறுவார்கள் ஆனால் அனல்மின் நிலையம் வந்தே தீரும் எனவும் இந்தியா வராவிட்டால் சீனா வந்து விடும் எனவும் ஆரம்பத்திலிருந்தேஅவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் சம்பூர் மற்றும் மூதூர்ப் பிரதேச மக்களைப் பொறுத்தவரையில் இந்நிலைப்பாடு மிகவும் தவறானதாகும்.

மின்நிலையத்திலிருந்து வெளியெறும் சாம்பல் சீனச் சாம்பலாக இருப்பதைவிட இந்தியச் சாம்பலாக இருப்பது மேலானது என திருவாளர் சம்பந்தன் நினைப்பது போல் தெரிகின்றது.  ஆனால் சீனச் சாம்பலும் வேண்டாம்  இந்தியச் சாம்பலும் வேண்டாம் என்பதே  மக்களின் நிலைப்பாடாகும்.

25.03.2016 அன்று சம்பூர் மகாவித்தியாலயத்தினை மக்களிடம் மீளவழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட திருவாளர் சம்பந்தன் அவர்கள் நுரைச்சோலை அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள்தான் இன்று அம்மின் நிலையத்தில் வேலை பார்ப்பதுடன் மிகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள் எனக்கூறியிருந்தார். இது முற்றிலும் உண்மைக்கும் புறம்பானதாகும்.

நாம் நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்திய தகவல்களின் படி அப்பிரதேசத்தினைச் சேர்ந்த இருவர் மட்டும் அனல் மின் நிலையத்தில் வாகனச்சாரதிகளாக பணியாற்றுவதை அறிய முடிந்ததுடன்  மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் அறியக் கூடியதாக இருந்தது.

மற்றுமொரு தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராசா அவர்கள் ஒருதொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் உதவி தேவையானபடியால் இந்திய  உதவியுடன் அமையப் போகும் சம்பூர் நிலக்கரி அனல் மின்நிலையத்தினை தாங்கள் எதிர்க்க முடியாது எனக் கூறுகின்றார். இவர் 1983-1987 இற்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்கின்றாரா அல்லது 2016 ஆம் ஆண்டில் வாழ்கின்றாரா என்பது மக்களுக்குப் புரியவில்லை.

இந்தியா தமிழ் மக்களுக்கு சமஸ்டி பெற்றுத் தருவதாகவோ அல்லது வடகிழக்கை இணைத்துத் தருவதாகவோ எங்காவது கூறியுள்ளதா? பதின்மூன்றாவது திருத்தச்சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களே கிடைக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் இலங்கை மீது அழுத்தத்தினைக் கொடுக்கக்கூடிய நிலையில் இந்தியா காணப்படுகின்றதா? அவ்விதமான அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடிய நிலையில் இலங்கை உள்ளதா?

இவ்வாறான விடயங்களை யதார்த்தமான முறையில் ஆராயாமல் கற்பனையில் நினைக்கும் தீர்வுத்திட்டத்திற்காக பத்துவருடமாக அகதிவாழ்க்கையினை அனுபவித்து விட்டு தற்போதுதான் தமது வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப முனையும் மக்களை அவர்கள் பிரதிநிதிகள் எனக்கூறிக் கொண்டு அதலபாதாளத்தில் தள்ளிவிட முனைவது தமிழரசுக்கட்சி தலைமைக்கு உகந்த விடயமாக இருக்கப் போவதில்லை.

இன்றுவரை தமிழரசுக் கட்சியானது மக்களைப் பெரியளவில் பாதிக்கக்கூடிய இத்திட்டம் பற்றி அப்பிரதேச மக்களிடமோ அல்லது சிவில் அமைப்புக்களுடனோ அல்லது துறைசார் நிபுணர்களிடமோ ஒரு விரிவான கலந்துரையாடல்களைச் செய்துமுடிவெடுக்க முன்வராமை மக்களிடம் அக்கட்சி பற்றி பலத்த சந்தேகம் ஏற்படுவதற்கு அக்கட்சியே வழிவகுத்துக் கொண்டிருக்கின்றது.

நாட்டுக்கும் மக்களுக்கும் உள்ள மாற்றுவழி என்ன?

முதலில் இலங்கை மின்சார சபையும் மீளுருவாக்கம் செய்யக்கூடிய சக்தி வள அமைச்சு என பெயர் வைத்துக் கொண்டு உலகிலேயே அழுக்கான மூலமாகக் காணப்படும் மலிவானது என்னும் ஒரே காரணத்திற்காக சூழல் பாதிப்புக்களையும் வெளிவாரி விளைவுகளையும் கவனத்தில் கொள்ளாமல் நிலக்கரியினை எரித்து மின்சாரம் பெற முற்படும் அமைச்சும் இலங்கை மின்சார சபையும் மக்களுக்குப் பொய்கூறுவதனை நிறுத்த வேண்டும்.

சம்பூரிலிருந்து கொழும்புக்கு மின்சாரத்தினை எடுத்துச் செல்வதற்குத் தேவையான கோபுரக் கட்டமைப்புக்களைச் செய்வதற்குத் தேவைப்படும் கிட்டத்தட்ட 200 மில்லியன்  அமெரிக்க டொலர்களைச் சேர்க்காமலும் நிலக்கரியினை இறக்குவதற்குத் தேவையான இறங்கு துறைக்கான செலவினையும் கருத்திற் கொள்ளாமலும் ஒவ்வொரு கிலோ வாட் மின்சார உற்பத்தி மூலமான சூழல் பாதிப்புச் செலவு  ரூபா 0.17 என குறைத்து மதிப்பிட்டு சம்பூர் நிலக்கரி அனல் மின்நிலையம் பொருளாதார ரீரியில் இலாபமானது எனக் காட்டிசம்பூர் அனல்மின்நிலையத்தின் தேவையினைஇலங்கை மின்சார சபையும் அமைச்சும்பொய்கூறி நியாயப்படுத்துகின்றன.

இலங்கையில் ஏனைய நாடுகளைப் போன்று மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கின்றது என்பது உண்மையே. ஆனால் ஏனைய நாடுகள் இப்பிரச்சினைக்கு எவ்வகையான தீர்வினைப் பெற முற்படுகின்றன என்பதை ஏன் இலங்கை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அறிய மறுக்கின்றனர்? குறுங்காலத்தில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் பெறும் வழிமுறைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும்.

நீண்டகாலத்தில் சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றின் மூலம் மின்சாரம் பெறும் வழிமுறைகள் பரவாலாக அமுல்படுத்தப்பட வேண்டும். சூழலை பேணிப்பாதுகாத்துத் கொண்டு எவ்வாறு பொருளாதார அபிவிருத்தியினை அடைவது என்பதனை மிகவும் சிறிய நாடான பூட்டானிடம் இலங்கை அறிந்து கொள்வது நல்லது. சூழல் பாதுகாப்பினை மிக முக்கியமானதாகக் கருதும் அந்த நாட்டின் அரசியலமைப்பின்படி  நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 60 வீதம் காடுகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் அந்நாடு 72 வீத நிலப்பரப்பில் காடுகளைக் கொண்டுள்ளது.

மன்னராட்சியினைக் கொண்டுள்ள அந்நாட்டில் மன்னர் தனது 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என அந்நாட்டின் அரசியலமைப்புக் கூறுகின்றது. ஜனநாய நாடாகக் கருதப்படும் இலங்கையில் 80 வயதினைத் தாண்டியும் அரசியல் செய்ய முற்படும் பல அரசியல் வாதிகள் சூழலினைப் பாதுகாத்துக் கொண்டு பொருளாதார அபிவிருத்தியினை எவ்வாறு அடைவது என்பதனை பூட்டானிடம் இருந்து கற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

– கலாநிதி. கோ. அமிர்தலிங்கம்
கொழும்புப் பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *