மேலும்

பனாமா ஆவணங்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் மூவர் – மகிந்த குடும்பத்தினரா?

Panama_Papersஉலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள- பனாமா ஆவணங்களில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரி ஏய்ப்புச் செய்து இரகசியமாக வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய பனாமா நாட்டு சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் 11.5 மில்லியன் இரகசிய தகவல்கள், பனாமா ஆவணங்கள்  என்ற பெயரில் கசிந்துள்ளன.

35 நாடுகளில் கிளைகளைக் கொண்டிருந்த மொசாக் பொன்சேகா நிறுவனமே, பாரிய வங்கிகளில், இரகசியமாக பணத்தைப் பதுக்குவதற்கான சட்ட ஆலோசனை நிறுவனமாக செயற்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு பணத்தைப் பதுங்கியுள்ளவர்களில் உலகத் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் பிரபலங்கள் பலரும் உள்ளடங்கியுள்ளனர். ரஸ்ய அதிபர் புடின், நடிகர்கள், அமிதாப் பச்சன், ஜாக்கி சான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆவணங்கள் கசிந்ததையடுத்து, அதில் இடம்பெற்றிருந்த ஐஸ்லாந்து பிரதமர் தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

இந்த ஆவணங்களில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளதா என்று ஆராயுமாறு சிறிலங்கா அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பனாமா ஆவணங்களில், சிறிலங்காவின் மூன்று அரசியல்வாதிகளின் பெயர்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா அரசியல்வாதிகளின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இவர்கள் சிறிலங்காவில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் அரசியல்வாதிகளில், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினராக இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *