மேலும்

வடக்கை அதிகாரத்துவ, மேலாதிக்க மனப்பாங்குடன் நடத்துகிறது சிறிலங்கா – விக்னேஸ்வரன் செவ்வி

cm-Wigneswaranசிறிலங்கா அரசாங்கம்,  வடக்கு மாகாணத்தை  ‘அதிகாரத்துவ, மேலாதிக்க, அராஜக’ மனப்பாங்குடன் நடத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது மாகாண மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு 65,000 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் ஒன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பாக சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது மாகாண நிர்வாகங்களுடன் விரிவாகக் கலந்துரையாடவில்லை எனவும் இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் மீது சிறிலங்கா அரசாங்கமானது தனது மேலாதிக்க, அதிகாரத்துவ மற்றும் அராஜகப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வீட்டுத் திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக தொழில் அதிபர்களை அழைக்காமைக்கான காரணம் என்ன என சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்ட போது, யாழ்ப்பாண நகரம் மற்றும் பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் மற்றும் சேர்பிடன் பெருநகரப் பகுதியை உள்ளடக்கிய இரட்டை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான வரைபு ஒன்றை வெளியுறவு அமைச்சிடம் வழங்கிய போதும் இதன் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் வடக்கு மாகாணமானது இன்னமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

எனினும், சிறிலங்காவின் தற்போது அரசாங்கத்தின் தலைவர்களால் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் ‘மிக,மிக நேர்மறையானதாகவும்’ காணப்படுகின்றன எனவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டம் என்ன என முதலமைச்சரிடம் வினவியபோது, பன்முகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் 10 ஆண்டு செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் திரு.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபை, உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பல்வேறு அமைப்புக்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சமஸ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சீர்திருத்தமே தற்போது முதன்மைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இவர் தெரிவித்தார். குறிப்பாக ‘சமஸ்டி’ என்ற வார்த்தையைப் பிரயோகிக்காமல் இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றில் கூட்டாட்சி முறை பின்பற்றப்படுவதாகவும் இதையொத்த ஆட்சி முறைமையையே தாம் விரும்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுடன் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதா என வினவியபோது, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டமை தொடர்பாகவே சம்பந்தனுடன் ‘தவறான புரிந்துணர்வு’ ஏற்பட்டதாகவும், தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்படாது எனவும் மாறாக இதற்கு சமாந்தரமாகப் பணியாற்றும் எனவும் இது ஒரு அரசியற் கட்சியாகத் தன்னை மாற்றிக் கொள்ளாது எனவும் சம்பந்தனிடம் எடுத்துக் கூறிய பின்னர் தற்போது அவர் ‘முற்றிலும் திருப்தியடைந்துள்ளதாக’ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்  ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியின் முழுவிபரம் வருமாறு:

கேள்வி: நீங்கள் ஒக்ரோபர் 2013ல் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற போது மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களைத் தங்களால் நிவர்த்தி செய்ய முடிந்துள்ளதா? இதுவரை இந்த மக்களுக்காக தங்களால் முன்னெடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை இங்கு பகிர்ந்துகொள்வீர்களா?

பதில்: நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வழங்கப்பட்ட தேர்தல் விளக்கவுரையுடன் மக்களின் ஆணையை ஏற்று 2013ல் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பெடுத்துக் கொண்டோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மிகவும் முக்கியமானதாகும். முதலாவதாக, வடக்கு மாகாணம் முழுவதும் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிற்குள் இருந்தது. இந்நிலையில் எமது தேர்தல் விளக்கவுரையின் முதன்மை விடயமாக இராணுவமயமாக்கலை இல்லாதொழித்தல் என்பது காணப்பட்டது. அடுத்ததாக அதிகாரப் பரவலாக்கலை நாம் வலியுறுத்தினோம். குறிப்பாக காணாமற் போனோர் விவகாரத்தில் நாங்கள் எமது கவனத்தைச் செலுத்தினோம். எமது மக்களில் அதிகம் பேர் காணாமற் போயுள்ளனர். நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று மாகாண சபையைப் பொறுப்பெடுத்த போது போர்க் குற்றங்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் காணப்படவில்லை. நாங்கள் மாகாண சபையைப் பொறுப்பெடுத்த போது 25 ஆண்டு கால இராணுவ ஆட்சி இங்கு நிலவியிருந்தது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. இந்தச் சூழலில் இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என நாங்கள் அதிக அழுத்தம் கொடுத்தோம். இதனை இன்றும் கூட எம்மால் முழுமையாகச் செய்ய முடியவில்லை.

இரண்டரை ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலமாகும். சிறிலங்காவிலுள்ள ஏனைய மாகாண சபைகள் 25 ஆண்டுகால நிர்வாகத்துடன் இயங்குகின்றன. சில ஏழு அல்லது எட்டு ஆண்டு நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை இங்கு குறிப்பிட முடியும். ஆனால், வடக்கு மாகாண சபையாகிய நாங்கள் மாத்திரமே இரண்டரை ஆண்டு கால மிகக் குறுகிய ஆட்சியைக் கொண்டு நடத்துகிறோம். அரசியற் பணி என்பது எனக்கு முற்றிலும் புதிய ஒன்றாகும். எமது மக்களுக்கும் இது புதிதாகும். எமது நிர்வாகத்தினர் முற்றிலும் வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டிருந்தனர். இவ்வாறானதொரு சூழலில் நான் எவ்வளவு தூரம் செயற்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் ஆராயவேண்டும். இந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களை ஒன்றாக்குதல், அதிகாரிகள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் உள்ள வளங்கள் அனைத்தும் மக்களின் நலன்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளன. இவற்றில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை. இவை அனைத்தும் எமது மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்ட சில சாதகமான செயற்பாடுகளாகும்.

கேள்வி: இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளைத் தங்களால் முன்னெடுக்க முடிந்துள்ளதா?

பதில்: நாங்கள் மாகாண சபையைப் பொறுப்பெடுத்த கையோடு தேவைப் பகுப்பாய்வு ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கினோம் என்பது இங்கு மிகவும் முக்கியமான விடயமாகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. பன்முகத் தேவைப் பகுப்பாய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனை ஐ.நா மேற்கொள்ள முன்வந்த போதிலும் பின்னர் இச்செயற்பாடானது மனிதாபிமானத் தேவைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டது. போரின் பின்னான காலப்பகுதியில் எமது தேவைகள் என்ன என்பதை ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது. நாங்கள் இந்த சமூகத்தை எவ்வாறான துறைகளில் முன்னேற்ற வேண்டும் மற்றும் மக்கள் மத்தியில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது. கெட்டவாய்ப்பாக, இவற்றை எங்களால் செய்ய முடியவில்லை.

அண்மையில், நாங்கள் இது தொடர்பாக சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துக் கூறிய போது அவர் அதனை வரவேற்றார். தற்போது தேவைப் பகுப்பாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன, 10 ஆண்டுத் தேவைகள் ஆராயப்படும். அதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்தி போன்றன மேற்கொள்ளப்படும்.

கேள்வி: இத்தேவைப் பகுப்பாய்வு எப்போது நிறைவுபெறும்?

பதில்: ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சிறிலங்காப் பிரதமர், அபிவிருத்தி ஒன்றியச் சந்திப்பை நடத்தவுள்ளார். இதன் பின்னர் இத்தேவைப்பகுப்பாய்வை எப்போது ஆரம்பிப்பதென இவர் எமக்கு அறிவிப்பார். இந்த ஆண்டில் இத்திட்டம் செயற்படுத்தப்படும் என நம்புகிறேன்.

கேள்வி: மாகாண சபையின் வரையறைக்குள், தொழில் அதிபர்கள் வடக்கில் தமது அலுவலகங்களை அமைப்பதற்கான அழைப்பை நீங்கள் விடுக்க முடியாதா?

பதில்: முன்னர் இது சாத்தியமற்ற விடயமாகக் காணப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இது சாத்தியப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். தற்போதைய அரசாங்கத் தலைவர்களால் விடுக்கப்படும் அறிக்கைகள் மிக மிக நேர்மறையானதாகும். தற்போதும், இது தொடர்பாக நான் ஒரு சாதாரண உதாரணத்தை வழங்க விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு யூலை மாதத்தில் நான் பிரித்தானியாவிற்குச் சென்ற போது, கிங்ஸ்ரன் மற்றும் சேர்பிடன் பெருநகரப் பகுதித்  தலைவர்களுடன் இரட்டை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடினேன். அதாவது அவர்கள் யாழ்ப்பாண நகரைப் பொறுப்பெடுத்து சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதே இதன் நோக்காகும். கலாசார நிகழ்ச்சிகள், பொருளாதார மற்றும் கலாசார செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இது இறுதிவடிவாக்கப்பட்டு, புரிந்துணர்வு உடன்படிக்கையையும் நான் தயாரித்திருந்தேன்.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. ஏனெனில் இவை ஏற்கனவே எமக்கு அதிகாரமளிக்கப்பட்ட விடயங்களாகும். எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் எவ்வித அறிவித்தலுமின்றி இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்கின்ற குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 04 அன்று பிரித்தானியாவின் தொழில் அதிபர்களை வடக்கு மாகாணத்திற்கு அழைப்பது தொடர்பாக அனுமதி கோரி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு கடிதம் அனுப்பினேன். இன்றுவரை, இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த மாதம் 15ம் திகதி, நானும் எமது மாகாண சபையின் அமைச்சர்களும் பிரதமரைச் சந்தித்தபோது இது தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறினேன். இது ஒரு பிரச்சினை அல்ல எனவும், இதனை நீங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் என்னிடம் கூறினார். தற்போது மங்கள சமரவீரவுக்கு நான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன், அதில் இந்த விடயத்திற்கு பிரதமர் அனுமதியளித்து விட்டார் எனவும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இதன் பின்னர் பிரித்தானிய உயர் ஆணையகத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு நான் திட்ட வரைபுகளை அனுப்பியுள்ளேன். யாழ்ப்பாண நகரில் பிரித்தானியாவின் துறைசார் வல்லுனர்கள் மாதிரித் திட்டங்களை மேற்கொள்வதற்கான காலம் கனிந்து விட்டது என நாங்கள் நம்புகிறோம்.

தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரத்துவப் போக்கு என்பது தற்போதும் நாங்கள் அனைத்துலக சமூகம், புலம்பெயர் மக்கள், இந்தியா போன்ற வெளித்தரப்பினரை வடக்கிற்கு அழைத்து மக்களுக்கு சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தடையாக உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். சிறிலங்கா அரசாங்கமானது எம்மைத் தமது மேலாதிக்கத்திற்கு உட்படுத்துகிறது. தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவர்கள் எம்மை நடத்த விரும்புகின்றனர் என்பதே உண்மையாகும்.

கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில் 65,000 வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் என்ன?

பதில்: மத்திய அரசாங்கமானது இது தொடர்பாக எம்முடனும், வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியிருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த மாதம் 15ம் திகதி எம்மிடம் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட போது நான் அதனை எதிர்த்தேன். இது சிறந்ததொரு திட்டமாக அமையாது என நான் கூறினேன்.

ஏனெனில், இந்த வீட்டிற்காக 2.1மில்லியன் செலவிடப்படவுள்ளது. இதற்குப் பதிலாக இதில் குறைந்தது இரண்டு வீடுகளை அமைக்க முடியும். அவ்வாறு அமைத்தால் 130,000 வீடுகளை அமைக்க முடியும். இதன் மூலம் வீடற்றோர் பிரச்சினையைத் தீர்க்க முடியும். ‘இது ஒரு மாதிரித் திட்டம். இது இன்னமும் இறுதிவடிவமாக்கப்படவில்லை’ என சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. அண்மையில் இது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் நாம் முற்றிலும் அவமதிக்கப்பட்டுள்ளோம். சிறிலங்கா அரசாங்கமானது  வடக்கு மாகாணத்தை  ‘அதிகாரத்துவ, மேலாதிக்க, அராஜக’ மனப்பாங்குடன் நடத்துகின்றது. இது எமக்கு நன்மை அளிக்கும் விடயமல்ல. இது சிறிலங்கா அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் விடயமாகும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கமானது எமது மக்களின் துன்ப துயரங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. நாங்கள் பல்வேறு துன்பங்களுக்கும், வறுமைநிலைக்கும் உட்பட்டுள்ளோம். இவற்றைப் பயன்படுத்தி அரசாங்கமானது வெளிநாடுகளிலிடமிருந்து நன்மைகளைப் பெற முயல்கிறது. எமது மக்களின் நீண்ட கால நலன்கள் இங்கு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: அரசியல் சீர்திருத்தம் தொடர்பான தங்களின் கருத்துக்கள் மற்றும் தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை சமூகத்தவர்களின் உண்மையான எதிர்பார்ப்புக்கள் என்ன?

பதில்: தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என்பது நேற்றோ அல்லது அதற்கு முதல் நாளோ ஏற்பட்டதல்ல. இவை கடந்த 67 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி என்பது மத்திய அரசாங்கத்தின் கைகளில் மட்டுமே அதிகாரங்கள் குவிந்திருக்கும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் சிறுபான்மை சமூகத்தவர்கள் அல்ல என்பதை இங்கு கூறவேண்டும். இவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமது பிரதேசங்களில் பெரும்பான்மைப் பலத்துடன் வாழ்கின்றனர்.

சமஸ்டி நிர்வாகம் என்பது அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆகவே சமஸ்டி போன்ற அதிகாரப் பரவலாக்கல் முறைமை காணப்படும் இந்தியா போன்ற நாடுகளின் ஆட்சி முறைமை இங்கும் பின்பற்றப்பட வேண்டும். அனைத்துலக சாசனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு, குறித்ததொரு சமூகத்தின் சிறப்பு இயல்புகளைக் கொண்டு அவர்களுக்கான ஆட்சி அமைக்கப்படும் உரிமையை அவர்கள் கொண்டுள்ளனர். அதாவது இவர்கள் தம்மைத் தாமே சுயமாக ஆளும் உரிமையைக் கொண்டுள்ளனர்.

சமஸ்டி நிர்வாக முறைமை காணப்படும் உலக நாடுகள் தமக்கிடையே பிரிந்து தனியாட்சி மேற்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, கியுபெக், ஸ்கொட்லாந்து, சுவிற்சர்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மாநில ஆட்சியைக் கொண்டிருந்தாலும் இவை தமக்கிடையே தனித்தனி நாடுகளாகப் பிளவுபடவில்லை.

எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே எமது இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. இதனை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறாவிட்டால், கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்று பல பிரச்சினைகள் ஏற்படும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களுடன் நீங்கள் தற்போது புரிந்துணர்விற்கு வந்துள்ளீர்களா?

பதில்: புரிந்துணர்வு ஏற்படுத்துகின்ற அளவிற்கு திரு.சம்பந்தனுக்கும் எனக்கும் இடையில் எவ்வித பிரச்சினையுமில்லை. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமே எமக்கிடையே தவறான புரிந்துணர்வு ஏற்படக் காரணமாகும். தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகச் செயற்படாது எனவும் மாறாக இதற்கு சமாந்தரமாகப் பணியாற்றும் எனவும் இது ஒரு அரசியற் கட்சியாகத் தன்னை மாற்றிக் கொள்ளாது எனவும் சம்பந்தனிடம் நான் எடுத்துக்கூறினேன்.  பின்னர் தற்போது அவர் ‘முற்றிலும் திருப்தியடைந்துள்ளார்’. இது மிகச் சிறிய விடயமாகும். வேறுவிதத்தில், எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆங்கில வழிமூலம் – தி ஹிந்து

மொழியாக்கம் – நித்தியபாாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *