மேலும்

ஆறுமுனைப் போட்டியில் பலசாலி யார்? – மாலன்

tamil naduஆறுமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விஜயகாந்த் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள் அணி வகுத்து நிற்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் (1991-2016) தமிழகத்தில் நடந்த ஐந்து சட்டப் பேரவைத் தேர்தல்கள் பெரும்பாலும் மும்முனைப் போட்டிகளையே சந்தித்து வந்திருக்கின்றன. 1996-இல் மட்டும் நான்கு முனைப் போட்டி இருந்தது.

பல முனைப் போட்டி இருந்தால், நடுநிலை வாக்குகள் ஓர் அணி அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ பதிவாகாமல் அவை பலவாறாகச் சிதறும். அவ்விதம் பலவாறாகப் பிரியும் போது சிறிய அளவு வாக்கு வித்தியாசங்கள் கூட வெற்றி, தோல்விகளைத் தீர்மானித்துவிடும் என்பது யதார்த்தம். அதாவது, எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

இந்த யதார்த்தம் புரிந்த எல்லாக் கட்சிகளுமே உள்ளூர அச்சத்தையும் உதட்டில் புன்சிரிப்பையும் சுமந்து திரிகின்றன. இதுவரை இப்படி ஒரு வியூகத்தைத் தமிழகத் தேர்தல் களம் சந்தித்ததில்லை என்பதால், இது யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்துக் கணிப்புகளும் ஊகங்களுமே உலவுகின்றன. கணக்குப் பார்க்க யாரும் துணியவில்லை; நாம் பார்க்கலாம்.

நெடுங்காலம் பின்னோக்கிப் போகாமல், கடந்த 2011 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டு, அதிலும் சிறிய வாக்கு வித்தியாசங்கள் எப்படி முடிவுகளைத் தீர்மானித்தன என்று பார்க்கலாம்.

2011 தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வின் தலைமையில் ஓர் அணியும், எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின் தலைமையில் ஓர் அணியும், பா.ஜ.க. தலைமையில் ஓர் அணியும் களத்தில் இறங்கின.

தி.மு.க. தலைமையேற்ற அணியில், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அ.தி.மு.க. அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, இந்தியக் குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த கூட்டணியில், பா.ஜ.க., சுப்பிரமணிய சுவாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. பகுஜன் சமாஜ் கட்சி தனித்து 193 தொகுதிகளில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி ஆகிய இரு பெரும் அணிகளுக்கு இடையிலேதான் போட்டி என வாக்காளர்கள் கருதினார்கள்.

எனவே, நடைமுறையில் கடந்த 2011 தேர்தலில் இருமுனைப் போட்டி நிலவியது என்றே கொள்ள வேண்டும். இரு பெரும் திராவிடக் கட்சிகளின் அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போது என்ன நடந்தது? சிறிய வாக்கு வித்தியாசம் எப்படி அரசியல் கட்சிகளின் தலைவிதியைத் தீர்மானித்தன?

சென்ற தேர்தலில், 10 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்விகள் தீர்மானம் ஆன தொகுதிகள் 47. இதில், தி.மு.க. 20 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது (ஆயிரம் விளக்கு, கீழ்வழித்துணையாங்குப்பம், கீழ்பெண்ணாத்தூர், பழனி, திருச்சி மேற்கு, தஞ்சாவூர், ஆலங்குளம், நாகர்கோவில், எழும்பூர், ஆரணி, திருக்கோவிலூர், சேந்தமங்கலம், திருவெறும்பூர், குடியாத்தம், தளி, சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர், புதுக்கோட்டை, கீழ்வேளூர், பெரியகுளம்). இந்த 20 இடங்களில் பாதி இடங்களை அது வென்றிருந்தால்கூட, தி.மு.க. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்திருக்கும்.

இன்றிருப்பதை விட வலுவான கூட்டணியோடு, கடந்த தேர்தலை எதிர்கொண்ட போதிலும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் சிலர் அன்று குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி காண முடிந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை விட 2,734 வாக்குகளே அவர் அதிகம் பெற்றார்.

அதேபோல, காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனும் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி காண முடிந்தது. அவரை அடுத்து வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அப்புவை விட அவர் 2,973 வாக்குகளே அதிகம் பெற்றார்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலு 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அவரது வாக்கு வித்தியாசம் 5,126. டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி தொகுதியில் 3,982 வாக்குகள் வித்தியாசத்திலும், திருவாடானை தொகுதியில் சுப தங்கவேலன் 927 வாக்கு வித்தியாசத்திலும், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் 640 வாக்குகளிலும் வென்றனர்.

இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், குறைந்த வித்தியாசத்தில் இந்த வெற்றிகளைத் தி.மு.க. பெற்றபோது, பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஓரளவிற்கு வாக்கு வளம் கொண்ட கட்சிகள் அதன் அணியில் இருந்தன. இன்று அவை அந்த அணியில் இல்லை.

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட தி.மு.க. தலைவர்களும் உண்டு.

ஆலங்குளம் தொகுதியில் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, வெறும் 299 வாக்குகள் வித்தியாசத்தில் (0.18) தோற்றுப் போனார். சிறிய வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்த இடங்கள் 10 (கொளத்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, அரவக்குறிச்சி, மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருப்பத்தூர், திருவாடானை, திருச்செந்தூர்).

நேருக்கு நேர் நடந்த மோதலில் அ.தி.மு.க.வும் சில இடங்களில் திணறியது என்பது கவனிக்கத்தக்கது. ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி 7,592 வாக்குகள் வித்தியாசத்தில் (5.68) திமுக வேட்பாளர் அசன் முகமது ஜின்னாவை வென்றார். மழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் அவர் மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆலங்குடியில் போட்டியிட்ட கு.ப. கிருஷ்ணன் 5,127 வாக்குகள் வித்தியாசத்திலும், கீழ்வழித்துணையாங்குப்பத்தில் போட்டியிட்ட செ.கு. தமிழரசன் 9,760 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டனர்.

இம்முறை, தி.மு.க. கூட்டணியில் ஓரளவு வாக்கு வளம் கொண்ட கட்சிகள் இல்லாததைப் போலவே, அ.தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க. மற்றும் மக்களிடம் ஓரளவு செல்வாக்குக் கொண்ட இடதுசாரிகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இல்லை.

கடந்த முறை, தி.மு.க. ஆட்சியிலிருந்து கொண்டு தேர்தலைச் சந்தித்தது. அப்போது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அ.தி.மு.க.விற்கு உதவின. இந்த முறை ஆட்சியிலிருந்து கொண்டு அ.தி.மு.க. தேர்தலைச் சந்திப்பதால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளையும் அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல முனைப் போட்டி என்பதால் அவை கொத்தாக தி.மு.க.விற்குக் கிடைக்காமல் சிதறுண்டு போக வாய்ப்புண்டு என்பதைக் குறித்து வேண்டுமானால் அது ஆறுதல் கொள்ளலாம்.

கூட்டணி மாஜிக் என்பது எத்தகைய மேஜிக் செய்யும் என்பதற்கு எழும்பூர் ஓர் உதாரணம். அந்தத் தொகுதியில் அன்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பரிதி இளம் வழுதி, தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் (0.18) அதாவது 202 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். கூட்டணி இல்லாமல் தே.மு.தி.க. பரிதி இளம் வழுதியை வீழ்த்தியிருக்குமா என்பதற்கான பதில் எல்லோருக்கும் தெரிந்ததே.

அதேபோல, பாளையங்கோட்டையில் தி.மு.க.வின் மொய்தீன்கான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை 605 வாக்குகள் வித்தியாசத்தில் (0.45) தோற்கடித்தார்.

இதேபோல, வாக்கு வளம் அதிகமில்லாத இன்னொரு கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன், சிதம்பரம் தொகுதியில், தி.மு.க.வின் ஸ்ரீதர் வாண்டையாரை மூவாயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் (2,879 வாக்குகள்) வென்றார்.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சென்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டும் வென்றது. அதனை மனிதநேய மக்கள் கட்சி (ஆம்பூர்), இந்தியக் கம்யூனிஸ்ட் ( வால்பாறை) போன்ற சிறிய கட்சிகள் கூட்டணி பலம் கொண்டு வீழ்த்தின. சென்ற தேர்தலில் அது இடம் பெற்ற கூட்டணியில் தி.மு.க. மட்டுமன்றி வேறு பல கட்சிகளும் இருந்தன. இப்போது அந்தக் கூட்டணியில் தி.மு.க. மட்டுமே பெரிய கட்சி.

அன்றிருந்த காங்கிரஸ் இன்று பிளவுபட்டிருக்கிறது. மிச்சம் உள்ள காங்கிரஸில் கோஷ்டி மோதல்கள் பகிரங்க ரகசியம். இந்த நிலையில், அதன் வெற்றி வாய்ப்புகள் எப்படி அமையும் என்பதைத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்

எனினும், கூட்டணியால் அதிக பலன் பெற்ற கட்சி என்று தே.மு.தி.க.வைத்தான் சொல்ல வேண்டும். 2011 தேர்தலில் அது 29 இடங்களில் வென்றது. அதில், 11 இடங்கள் பத்தாயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்கள். அந்தக் கட்சியால், கூட்டணி பலத்தால் பா.ம.க.வின் தலைவர் ஜி.கே.மணியை 2,500க்கும் சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் (2,594 வாக்குகள்) வீழ்த்த முடிந்தது.

இந்தத் தேர்தலில். ஒவ்வொரு வாக்கும் வரலாறு காணாத வலிமை பெறுகிறது. இதுநாள் வரை கிங் மேக்கராக இருந்த வாக்காளர் இந்த முறை கிங் ஆகிறார்.

– மாலன் ( மூத்த ஊடக ஆசிரியர்)

வழிமூலம் – தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *