மேலும்

இந்தியப் பிரதமர் மோடியுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா அதிபர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நண்பகல் புதுடெல்லியில் சந்தித்தேன்.

AI Impact 2026 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு இதன்போது எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

இந்திய – சிறிலங்கா இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடினேன்.

அத்துடன், ‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது சிறிலங்காவுக்கு வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், அதற்காக இந்தியப் பிரதமருக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்.“ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தச் சந்திப்புக் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“டெல்லியில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.

அண்மைக் காலங்களில் இந்திய – சிறிலங்கா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக நாம் மீளாய்வு செய்திருந்தோம்.

அத்துடன், எரிசக்தி, இணைப்புகள், உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு, திறன் விருத்தி, கலாசாரம், நீலப் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடியிருந்தோம்.” என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *