மேலும்

புதுடெல்லியில் தாக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்ட ஜே.ஆர் – காவல்துறை அதிகாரி தகவல்

கொழும்பில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவரால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தாக்கப்பட்ட பின்னர், புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் அதுபோன்றதொரு தாக்குதலை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் அதிகாரி நிமால் லெகே.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக இருந்த நிமால் லெகே, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர். இதுகுறித்து, அவர் அண்மையில் வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது-

“1987இல் இந்திய- சிறிலங்கா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொழும்பு வந்திருந்த போது,அந்த துரதிஸ்டமான சம்பவம் நடந்திருந்தது.

கடற்படைச் சிப்பாய் ஒருவர், தனது துப்பாக்கிப் பிடியினால் தாக்க முயன்றிருந்தார். அந்த சர்ச்சைக் குரிய சம்பவம் பற்றி சிறிலங்காவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பேசப்பட்டது.

அந்தச் சம்பவம் இடம்பெற்ற பின்னர், இந்தியாவின் தேசிய நாள் நிகழ்வில் சிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரதம விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகளுடன், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புத் தொடர்பாக நாம் கலந்துரையாடிய போது, சிறிலங்கா அதிபர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடுவது குறித்து கலந்துரையாடப்படவில்லை.

ராஜீவ் காந்திக்கு நடந்தது போன்ற சம்பவம் புதுடெல்லியில் சிறிலங்கா அதிபருக்கு நிகழலாம் என்று சந்தேகம் எழுந்தது.

அப்போது எமக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் இருந்து அணிவகுப்பைப் பார்வையிடுவது அல்லது அணிவகுப்புக்கு முன்னால் செல்வது என்பனவே அவை.

தாம் அணிவகுப்புக்கு முன்னே சென்று பார்வையிடவுள்ளதாக சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறினார்.முடிவை எடுப்பதற்கு முன்னர் எல்லாப் பக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது.

நாம் இரண்டு கோரிக்கைகளை விடுத்தோம். அணிவகுப்பை அதிபர் பார்வையிடும் போது, அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளே அவருடன் செல்வது வழக்கம். ஆனால் சிறிலங்கா அதிபருடன், எமது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரை அனுமதிக்கும்படி நாம் கோரினோம். அந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.

சிறிலங்கா அதிபர் நடந்து செல்லும் செங்கம்பளத்தை, அணிவகுப்பில் முதல் வரிசைப் படையினரில் இருந்து ஒரு மீற்றர் தூரத்தில் அமைக்க வேண்டும் என்றும் நாம் கோரினோம்.

உலகிலேயே முதல்முறையாக, அணிவகுப்பு வரிசையில் இருந்து ஒரு மீற்றர் தூரத்துக்கு அப்பால் செங்கம்பளம் விரிக்கப்பட்டது. இதே உத்தி பல்வேறு நாடுகளில் இப்போது பின்பற்றப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *