மேலும்

900 கடற்படையினருடன் நாளை கொழும்பு வருகிறது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல், எதிர்வரும் 31ஆம் நாள் வரை அங்கு தங்கியிருக்கும் என்று அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், போர்க்கப்பலில் கொழும்பு வரும் 900 அமெரிக்க கடற்படையினர், இங்கு சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளை எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் முக்கிய கப்பல் பாதைகளில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக, கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, கடந்த மாதம், சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வொசிங்டனில் நடத்தப்பட்ட கூட்டு கலந்துரையாடலை அடுத்து இந்தப் போர்க்கப்பல் கொழும்பு வரவுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பலமான உறவுகள், பரந்தளவிலான உறுதிப்பாடு, பாதுகாப்புச் செழுமை, மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்திய ஒழங்குமுறைக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், போர்க்கப்பல், அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் கட்டளைக் கப்பலாகவும் செயற்பட்டு வருகிறது.

2011ஆம் ஆண்டு நொவம்பர் மாதம், அமெரிக்கப் போர்க்கப்பலான, யுஎஸ்எஸ் போர்ட்  சிறிலங்காவின் காலி துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தது.

அதற்குப் பின்னர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவேயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *