மேலும்

உருக்கு வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – சுமந்திரன்

sumanthiranவடக்கு, கிழக்கில் உருக்கினால் தயாரிக்கப்பட்ட பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது. எமது மக்களுக்கு 137 ஆயிரம் வீடுகள் தேவையாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றைப் படிப்படியாக முன்னேற்ற வேண்டுமென்ற கோரிக்கையை நாம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.

ஏற்கனவே இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது. இந்திய அரசாங்கத்தின் அந்த செயற்பாடு வரவேற்கப்பட வேண்டியது,

இந்திய அரசாங்கம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்குகிறது. அந்தப் பணம் போதுமானதாக அல்ல என்ற கருத்தும் உள்ளது. எனினும் அப்பணத்தினூடாகவே வீடுகள் நிர்மாணிக்கப்படுவதையும் அவதானிக்க முடியும்.

இவ்வாறான நிலையில்தான் தற்போது 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பிரகாரம் அமைக்கப்படும் வீடொன்றுக்கு 21 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

எற்கனவே 6 முதல் 7 இலட்சத்துக்கிடையில் முழுமையான வீடொன்றை நிர்மாணிக்க முடியுமென கூறப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய அத்தொகையிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்த தொகையிலேயே இவ் வீடு அமைக்கப்படவுள்ளது.

உண்மையிலேயே இந்த 21 இலட்சம் ரூபா தொகையில் எமது மக்கள் தமது சொந்த மண்ணில் மூன்று தலைமுறையினர் வாழக்கூடிய வகையில் கல் வீடு ஒன்றை அமைத்துக் கொள்ள முடியும்.

சாதாரணமாக சகல வசதிகளையும் கொண்ட கல்வீடொன்றை 10 இலட்சம் ரூபா தொகைக்கு அமைத்துக் கொள்ள முடியும்.

ஆகவே நீடித்திருக்ககூடிய வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்றே இந்தச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இந்த வீடு தொடர்பாக அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்களுடன் கலந்தாலோசித்தேன். அவர்களின் கருத்துக்களை முழுமையாக பெற்றுக் கொண்டு குறித்த வீட்டுத்திட்டத்தின் மாதிரி வீடொன்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன்.

தளபாடங்கள் மின்விசிறி ஏனைய உபகரணங்கள் சூரிய சக்தியைப் பெறும் கலம் என பலவசதிகள் கொண்டு காணப்படுகின்றன. ஆனால் உருக்கிலான பகுதிகளில் பொருத்தும் இடங்களில் இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றின் பாகங்களை அசைக்கும் போது வீடே அசைகிறது.

சுவர்கள் விரைவில் உடைந்து விடும் நிலைமையும் காணப்படுகிறது. வெப்பத்தில் இருந்து அது எவ்வாறு பாதுகாக்கும் என்பது குறித்து முழுமையான விபரங்கள் இல்லை.

குறித்த வீட்டில் பெண்ணொருவர் இருந்தார். அந்த வீடு தொடர்பாக கேட்டபோது அவர் மகிழ்ச்சியாக தனது கருத்துக்களை கூறினார். அவர்களின் உடனடித் தேவைக்கு அது போதுமானதாகவுள்ளது. ஆனால் பருவகால மாற்றங்களின்போதே வீட்டின் யதார்த்ததை உணர்ந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமன்றி அந்த வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களை மீளப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்குமா என்பது தொடர்பாகவும் புரியாத நிலைமையிலேயே மக்கள் உள்ளனர்.

அப் பகுதியில் கடமையிலிருந்த பொறியியலாளருக்கே அவ்வாறான வீடுகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டிருக்கவில்லை என்பதை அவரோடு உரையாடும்போதே அறிய முடிந்தது.

வீடுகள் தொடர்பான குறைபாடுகள் தொடர்பில் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.

இத்திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர்களை செலவிடுகின்றது. அவ்வாறான பெருந்தொகைப் பணத்தை செலவிடும்போது அது பயனுள்ளதாக அமைய வேண்டும்.

மீளச் செலுத்தும் கடன்களைப் பெற்றே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கின்றது. ஆகவே குறித்த திட்டத்தினை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறான திட்டங்கள் சமூகத்துடன் சமமான வகையில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டும்.

மேலும் இவ்வாறான திட்டங்களில் நிரந்தர வீடுகளை அமைக்கின்றபோது எமது மக்கள் தொழில்வாய்ப்புக்களையும் பெறக்கூடிய சூழல் ஏற்படும். ஏறக்குறைய 13 ஆயிரம் வரையிலான தொழிலாளர்கள் அவ்வாறான வாய்ப்பினை பெறுவதற்காக எமது சமூகத்தில் உள்ளார்கள். அது தொடர்பாகவும் கவனமெடுக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வீட்டுத்திட்டத்தை யார் கட்டப்போகிறார்கள் என சிறிலங்கா அதிபர் சம்பூருக்கு வந்தபோது கேள்வியெழுப்பியிருந்தோம்.

தற்போது கேள்விப்பத்திர ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தவறுகளும் காணப்படுகின்றன. இதற்கிடையில் இருப்பவர்கள் யார் எவ்வாறான பயனைப் பெற்றுள்ளார்கள் என்பது தெரியாதுள்ளது.

எனினும் உருக்கு உற்பத்தியாளர்கள் தமது கழிவுகளை வெறியேற்றுவதற்கு இடங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வீட்டுக்கு ஒரு பெறுமதியுள்ளது. ஆனால் உள்ளூர் தேவை மற்றும் நீண்டகால தேவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும். கொள்கை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சிலர் வீடுகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் வெளியிடுகிறோம் எனக் கூறுகிறார்கள். விசனங்களை வெளியிடுகிறார்கள். எனினும் நியாயமான விடயங்களை கருத்தில் எடுக்க வேண்டும்.

தொடர்ந்தும் கடன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது தெளிவான கொள்கை முறைமையில் மீளாய்வினூடாக இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *